படேல் சிலையில் விரிசல்: வதந்தி பரப்பியவருக்கு 'வலை'
படேல் சிலையில் விரிசல்: வதந்தி பரப்பியவருக்கு 'வலை'
ADDED : செப் 11, 2024 04:41 AM
கெவாடியா: சர்தார் படேலின் பெருமையை நினைவுகூரும் வகையில், குஜராத்தின் நர்மதா மாவட்டத்தில் உள்ள கெவாடியாவில் 182 உயர பிரமாண்ட சிலை அமைக்கப்பட்டுள்ளது. இதை கடந்த 2018ல் பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்.
'ஒற்றுமைக்கான சிலை' என்று அழைக்கப்படும் இந்த சிலையில் விரிசல் ஏற்பட்டுள்ளதால், எந்த நேரத்திலும் இடிந்து விழலாம் என சமூக வலைதளத்தில் மர்ம நபர் ஒருவர் செப்., 8ம் தேதி பதிவிட்டிருந்தார். 'ராகா4இந்தியா' என்ற எக்ஸ் வலைதள பக்கத்தில் உள்ள பதிவில், கட்டுமானத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படத்தையும் அவர் பகிர்ந்திருந்தார்.
இதையடுத்து, ஒற்றுமைக்கான சிலையின் அதிகாரப்பூர்வ எக்ஸ் தள கணக்கில் இது பொய் என கூறப்பட்டதை அடுத்து, அந்தப் பதிவு நீக்கப்பட்டது. இந்நிலையில், சிலை குறித்து வதந்தி பரப்பப்பட்டதாக போலீசில் ஒற்றுமைக்கான சிலை பகுதியின் வளர்ச்சி மற்றும் சுற்றுலாத் துறை ஆணையத்தின் துணை கலெக்டர் அபிஷேக் ரஞ்சன் சின்ஹா புகார் அளித்தார். இதைத் தொடர்ந்து, எக்ஸ் தளத்தில் பதிவிட்டவர் மீது பொய்ச்செய்தி பரப்பியதாக வழக்குப் பதிவு செய்த போலீசார் அவரை தேடி வருகின்றனர்.

