நிம்மதி உங்கள் கையில்.. இன்று (ஆக.4, 2024) ஆடி அமாவாசை
நிம்மதி உங்கள் கையில்.. இன்று (ஆக.4, 2024) ஆடி அமாவாசை
ADDED : ஆக 04, 2024 03:09 AM

நண்பரை பார்க்க அவசரமாக செல்வோம்... வீட்டிலோ அவரை இல்லை என்று சொல்வார்கள். சரி போனிலாவது பேசலாமா என அவரது மனைவியிடம் கேட்டால் அவரோ வீட்டிலேயே வைத்து விட்டார் என புலம்புவார்.
அது போல போட்டித் தேர்வு ரிசல்ட் வரும். நம் மகன் கால் மார்க்கில் வாய்ப்பை இழந்திருப்பார். இப்படி பல சந்தர்ப்பங்களில் தடை, தாமத்தை சந்தித்திருப்பீர்கள்... எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது... நானும் தினமும் கோயிலுக்கு போகிறேன்... வாழ்க்கை போர்க்களமாக இருக்கிறது... என புலம்பியிருப்பீர்கள்...
இதற்கு அடிப்படை காரணம் முன்னோரை வழிபடாததே.
எந்த கோயிலுக்கு சென்றாலும் என்ன பரிகாரம் செய்தாலும் முன்னோர் ஆசியில்லாமல் எதுவும் நடக்காது. முன்னோர் ஆசி என்பது நம் முன்னேற்ற மாளிகையின் சாவி. அது திறந்தால் தான் நிம்மதி கிடைக்கும்.
ஆம்... முன்னோர் நம் செயல்களை பார்த்துக்கொண்டே தான் இருக்கிறார்கள். அவர்களுக்கு செய்ய வேண்டிய பிதுர்கடனைச் செய்தால் மகிழ்ச்சி அடைவர். இல்லாவிட்டால் வருத்தப்படுவார்களே தவிர சபிக்க மாட்டார்கள். அதே சமயம் அவர்களுக்கான கடமைகளை செய்தால் மகிழ்ச்சியடைந்து வாழ்த்துவர். அந்த வாழ்த்து பல மடங்காக பெருகி தடைகளில் இருந்து நம்மை காக்கும்.
நம்மிடம் பெரிதாக எதுவும் முன்னோர் எதிர்பார்ப்பதில்லை. அமாவாசையன்று எள்ளும் தண்ணீரும் கலந்து தர்ப்பணம் கொடுப்பதை மட்டும் அவர்கள் எதிர்பார்க்கின்றனர். அதைக்
கூட செய்யாத போது தான் வருத்தம் அடைகின்றனர்.
எனவே தந்தையை இழந்த அனைவரும் அமாவாசையன்று தர்ப்பணம் கொடுப்பது
அவசியம். ஒருவேளை செய்யாவிட்டால் ஆடி, தை, புரட்டாசி அமாவாசைகள் முக்கியம். இந்நாட்களில் செய்யும் தர்ப்பணம் முன்னோருக்கு ஆறுதல் அளிக்கும். இவற்றில் ஆடி அமாவாசை சிறப்பு மிக்கது. சூரியன் வடக்கில் இருந்து தெற்காக பயணிக்கும் தட்சிணாயண காலத்தின் துவக்கம் ஆடி.
தர்ப்பணம் செய்ய நீர்நிலைகளை தேட வேண்டும், பணம் செலவழிக்க வேண்டும் என்ற அவசியமில்லை. வசதி இருப்பவர்கள் நீர்நிலைகளில் தர்ப்பணம் செய்யலாம். வசதி இல்லாதவர்கள் பொது இடங்களில் தர்ப்பணம் செய்பவர்கள் மூலம் செய்யலாம்.
தந்தை, தாத்தா, கொள்ளுத்தாத்தா, தாயார், பாட்டி, கொள்ளுப்பாட்டி, தாயார் வர்க்கத்தில் தாயின் தந்தை, அவரின் தாத்தா, கொள்ளுத்தாத்தா, தாயின் தாய், பாட்டி, கொள்ளுப்பாட்டி என மொத்தம் 12 பேரின் பெயர்கள், கோத்திரங்கள் சொல்லி தர்ப்பணம் செய்வதே முறையானது. இதில் யார் பெயராவது தெரியவில்லை என்றால் குடும்பத்தில் இருக்கும் மூத்தவர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.
எனவே ஆடி அமாவாசையன்று (ஆக.4, 2024) தர்ப்பணம் கொடுத்து முன்னோரின் ஆசியை பெறுவோம்.
எஸ்.சந்திரசேகர், மதுரை.