பழநி மாவட்டம் அறிவிக்க திட்டம் உடுமலையை இணைக்க மக்கள் எதிர்ப்பு
பழநி மாவட்டம் அறிவிக்க திட்டம் உடுமலையை இணைக்க மக்கள் எதிர்ப்பு
ADDED : பிப் 28, 2025 01:57 AM
உடுமலை:தமிழக அரசு பழநியை மாவட்டமாக அறிவிக்க திட்டமிட்டுள்ள நிலையில், அதில் உடுமலை, மடத்துக்குளம் தொகுதிகளை இணைக்கக்கூடாது என பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள, பழநி, ஒட்டன்சத்திரம் மற்றும் திருப்பூர் மாவட்டத்திலுள்ள, உடுமலை, மடத்துக்குளம் சட்டசபை தொகுதிகளை இணைத்து, பழநி மாவட்டம் அறிவிக்க அமைச்சர் சக்கரபாணி முயற்சித்து வருகிறார்.
கடந்த சட்டசபை தேர்தல் பிரசாரத்தின் போதும், இது தேர்தல் வாக்குறுதியாக வழங்கப்பட்டிருந்தது.
இதற்காக, நடப்பு சட்டசபை கூட்டத்தொடரில் அறிவிக்கும் வகையில், வருவாய்த்துறை கமிஷனர் வாயிலாக, அவசர கடிதமாக அனுப்பி அதிகாரிகள் மட்டத்தில் 'ரகசிய' கருத்துரு பெறப்பட்டுள்ளது.
ஏற்கனவே, கோவை மாவட்டத்திலிருந்து உடுமலை, மடத்துக்குளத்தை பிரிக்கும் போது, பொதுமக்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பு கிளம்பிய நிலையிலும், இணைக்கப்பட்டது.
தற்போது, கொங்கு மண்டல பகுதியை, மதுரை மண்டலத்தில் இணைப்பதால், நிர்வாகம் மற்றும் பாரம்பரியமாக முரண்பாடு ஏற்படும்.
மதுரை காவல் துறை என அரசு துறை நிர்வாகங்கள் அனைத்தும், தென்மாவட்டங்களை சார்ந்து அமையும் என்பதால், இப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். எனவே, உடுமலையை பழநி மாவட்டத்துடன் இணைக்கக்கூடாது. உடுமலை பகுதி, தென்னை, கரும்பு, நெல், காய்கறிகள், மக்காச்சோளம் என விவசாயம் பிரதானமாக உள்ள நிலையில், காற்றாலை, கறிக்கோழி, தாய்க்கோழி பண்ணை, முட்டை உற்பத்தி, வெண்பட்டுக்கூடு உற்பத்தி, தென்னை நார் தொழிற்சாலைகள், நுாற்பாலைகள், காகித ஆலைகள் என தொழில் வளர்ச்சி மிகுந்த பகுதியாக உள்ளது.
அமராவதி சைனிக் பள்ளி, கால்நடை மருத்துவ பல்கலை, அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை, எரிசாராய ஆலை, திருமூர்த்தி அணை, அமராவதி அணை என சுற்றுலா மையங்களும், மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனம், கேந்திரிய வித்யாலயா பள்ளி, மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் அலுவலகம், கல்லுாரி, ஐ.டி.ஐ.,என அனைத்து துறைகளும் உள்ளன.
இந்நிலையில், உடுமலையை தலைமையிடமாக கொண்டு, சுற்றுப்பகுதியிலுள்ள பகுதிகளை இணைத்து, மாவட்டமாக அறிவிக்க வேண்டும், என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். இது குறித்து கோரிக்கைகள், சமூக வலைதளங்களில் அதிகளவு பரவி வருகிறது.
விவசாய பாதுகாப்பு சங்க தெற்கு மாவட்ட செயலாளர் செந்தில்குமார் கூறியதாவது:
தென்மாவட்டங்களின் ஒரு பகுதியாக உள்ள பழநியுடன், கொங்கு மண்டலத்தின் பகுதியாக உள்ள உடுமலை, மடத்துக்குளத்தை சேர்க்க திட்டமிட்டுள்ளனர். பூகோள ரீதியாகவும் , பண்பாடு, கலாசார ரீதியாகவும் ஒத்துவராத பகுதியாக உள்ளது.
மடத்துக்குளம், உடுமலை தொகுதிகளை பிரிக்கும் போது, பொள்ளாச்சி நகரம் வரை தொகுதி அமைந்துள்ளது. இதனால், பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்படுவர்.
மாவட்டங்கள் பிரிக்கும் போது, மக்களின் உணர்வுகளையும் அரசு புரிந்து கொள்ள வேண்டும். உடுமலை பகுதி விவசாயம், தொழில் வளர்ச்சியை அதிகரிக்கும் வகையிலும், அடிப்படை கட்டமைப்புகளை உருவாக்கும் வகையிலும், உடுமலையை சுற்றியுள்ள பகுதிகளை இணைத்து, உடுமலையை தலைமையிடமாக கொண்டு தனி மாவட்டம் உருவாக்க வேண்டும்.
இவ்வாறு தெரிவித்தார்.