முன்னறிவிப்பின்றி வசூலை துவக்கியதால் டோல்கேட்டை அடித்து நொறுக்கிய மக்கள்
முன்னறிவிப்பின்றி வசூலை துவக்கியதால் டோல்கேட்டை அடித்து நொறுக்கிய மக்கள்
ADDED : மார் 13, 2025 02:04 AM

பட்டிவீரன்பட்டி,: திண்டுக்கல் மாவட்டம் சேவுகம்பட்டி டோல்கேட்டில் முன்னறிவிப்பின்றி, வாகனங்களுக்கு கட்டணம் வசூல் செய்யப்பட்டதால் கிராமத்தினர், விவசாயிகள் டோல்கேட்டை அடித்து நொறுக்கினர்.
திண்டுக்கல் - குமுளி ரோடு அகலப்படுத்தும் பணி 2020ல் முடிந்தது. 2021ல் பட்டிவீரன்பட்டி அருகே சேவுகம்பட்டியில் டோல்கேட் அமைக்கப்பட்டது. இருவழிச்சாலை மட்டுமே உள்ளதால் டோல்கேட் கட்டணம் வசூலிக்க கூடாது என தொடரப்பட்ட வழக்கில் நீதிமன்றம் தடை விதித்தது. 2023ல் மீண்டும் வசூல் நடத்த ஏற்பாடுகளை தனியார் நிறுவனம் மேற்கொண்டது.
அப்போது நிலக்கோட்டை டி.எஸ்.பி., ஆக இருந்த முருகன், ரோடு பணிகளை முழுமையாக முடித்த பின் கட்டணம் வசூலிக்கலாம் என கூறியதால் நிறுத்தப்பட்டது. இந்நிலையில் நேற்று முன்தினம் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மூலம் எஸ்.பி., நிலக்கோட்டை டி.எஸ்.பி., தாசில்தார், பட்டிவீரன்பட்டி இன்ஸ்பெக்டருக்கு மார்ச் 12 காலை 8 :00 மணிக்கு சுங்கவரி கட்டணம் துவங்க இருப்பதால் பாதுகாப்பு வழங்க அனுமதி கடிதம் கொடுக்கப்பட்டது.
இந்த தகவல் சுற்று கிராமத்தினருக்கு தெரிய வர நேற்று காலை 6:00 மணிக்கு டோல்கேட் வந்தனர். அங்கிருந்த கேமராக்கள், கம்ப்யூட்டர்கள், சென்சார் போர்டுகளை அடித்து நொறுக்கினர். அலுவலக கண்ணாடிகளும் நொறுக்கப்பட்டன.
இதையடுத்து டோல்கேட்டில் கட்டணம் வசூல் நிறுத்தப்பட்டுள்ளது. பட்டிவீரன்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.