பழனிசாமியின் பாதக செயல்களை மக்கள் மன்னிக்க மாட்டார்கள்: தி.மு.க.,
பழனிசாமியின் பாதக செயல்களை மக்கள் மன்னிக்க மாட்டார்கள்: தி.மு.க.,
ADDED : ஏப் 14, 2024 02:21 AM
சென்னை : 'முதல்வராக இருந்த போது, பழனிசாமியின் பாதகச் செயல்களை மக்கள் மறக்கவும் மாட்டார்கள்; மன்னிக்கவும் மாட்டார்கள்' என, தி.மு.க., தலைமை தெரிவித்துள்ளது.
அக்கட்சியின் அறிக்கை:
எந்த ஒரு அரசியல் கட்சியின் பின்னணியும் இல்லாமல் தன்னெழுச்சியாக, துாத்துக்குடி ஸ்டெர்லைட் தொழிற்சாலைக்கு எதிராக, மக்கள் திரண்டு பல மாதங்கள் போராடினர்.
அந்த மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி, 13 பேரை கொன்றது பழனிசாமியின் போலீஸ் துறை. ஒரு தந்தையின் கண் எதிரே, அவரது மகன் சுட்டுக் கொல்லப்பட்டான். இதுபோன்ற காட்சிகளை கண்ட மக்கள் பதறினர்.
இந்தக் கொடுமைகள் குறித்து, அப்போதைய முதல்வர் பழனிசாமியிடம், பத்திரிகையாளர்கள் கேட்டபோது, 'தொலைக்காட்சியில் பார்த்து தான் தெரிந்து கொண்டேன்' என்றார் நிதானமாக.
ஒரு முதல்வர் இப்படிக் கூறியது நியாயமா?
நீதியரசர் அருணா தலைமையிலான ஆணையம், அந்தச் சம்பவம் குறித்து ஏற்கனவே அவருக்குத் தெரியும் எனக்கூறி, பழனிசாமியின் பொய் முகத்தை வெளிப்படுத்தியது.
பொள்ளாச்சியில் அன்றைய ஆளுங்கட்சியான அ.தி.மு.க.,வைச் சேர்ந்தவர்கள், 200க்கும் மேற்பட்ட மகளிரை மிரட்டி, பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளாக்கினர். பாதிக்கப்பட்ட மகளிர் கூறியும், குற்றவாளிகளை பாதுகாத்தவர் பழனிசாமி.
ஜெயலலிதா இருந்தவரை, 'நீட்' தேர்வை தமிழகத்தில் அனுமதிக்கவில்லை. ஆனால், நீட் தேர்வை தமிழகத்துக்குள் அனுமதித்தவரும் பழனிசாமி தானே. 'உதய்' மின் திட்டத்தை அனுமதித்தவரும் பழனிசாமியே; உதய் மின் திட்டத்தால் தமிழகத்துக்கு நன்மை இல்லை. மின்வாரியத்தின் கடன் 40 ஆயிரம் கோடியை தமிழக அரசு ஏற்று, அதன் நிதிச்சுமை தமிழக அரசின் மேல் விழுந்தது.
குடியுரிமை திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்ட போது, அ.தி.மு.க., - எம்.பி.,க்கள் 11 பேர் ஓட்டு அளிக்காமல் இருந்திருந்தால், அந்த சட்டம் நிறைவேறி இருக்காது. ஆனால், அந்த சட்டத்திற்கு ஒப்புதல் தந்து, சிறுபான்மையினருக்கு எதிராக நடந்து கொண்டது அ.தி.மு.க.,
மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களை ஆதரித்தவர் பழனிசாமி என்பதை, யாரும் எளிதில் மறந்துவிட மாட்டார்கள். தொழில் வளர்ச்சியில் தமிழகத்தை கடைசி இடத்திற்குத் தள்ளியது, இந்த பழனிசாமி ஆட்சிதானே.
முஸ்லிம்கள், கிறிஸ்துவர்களின் ஓட்டுகள் முழுதும் தி.மு.க., கூட்டணிக்கு சென்றுவிடக் கூடாது என, வஞ்சக நோக்கத்துடன் பிதற்றுகிறார். பா.ஜ.,வுடன் கள்ளக் கூட்டணி வைத்துள்ள பழனிசாமியின் பாதகச் செயலை இனியும் மக்கள் நம்புவதற்கு ஏமாளிகள் அல்ல. இனி ஒருபோதும் மறக்க வும் மாட்டார்கள்; மன்னிக்கவும் மாட்டார்கள்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

