'மக்களுடன் முதல்வர்' திட்டம் தர்மபுரியில் இன்று துவக்கம்
'மக்களுடன் முதல்வர்' திட்டம் தர்மபுரியில் இன்று துவக்கம்
ADDED : ஜூலை 11, 2024 02:45 AM
தர்மபுரி:ஊரக பகுதிகளுக்கான, 'மக்களுடன் முதல்வர்' திட்டத்தை, தர்மபுரியில் முதல்வர் ஸ்டாலின் இன்று துவக்கி வைக்கிறார்.
தமிழகத்தில், அரசின் சேவைகள் பொதுமக்களை விரைவாகவும், எளிதாகவும் சென்று சேர்ந்திடும் வகையில், 'மக்களுடன் முதல்வர்' என்ற புதிய திட்டத்தை, தமிழக முதல்வர் ஸ்டாலின் கடந்த, டிச., 18ல் துவக்கி வைத்தார்.
அதன்படி முதற்கட்டமாக நகர பகுதிகளில் கடந்த டிச., மற்றும் ஜன., மாதங்களில் முகாம் நடந்தது. இதில், 15 அரசு துறை சார்ந்த, 44 சேவைகள் அடையாளம் காணப்பட்டு முகாம் நடத்தப்பட்டது. இந்நிலையில், 2வது கட்டமாக இன்று (11ம் தேதி) ஊரக பகுதிகளுக்கான, 'மக்களுடன் முதல்வர்' திட்டம் துவங்கப்படுகிறது.
அதன்படி, தமிழக முதல்வர் ஸ்டாலின், தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அடுத்த பாளையம்புதுார் பஞ்.,ல் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில், இன்று காலை, 11:00 மணிக்கு, ஊரக பணிகளுக்கான, 'மக்களுடன் முதல்வர்' திட்டத்தை துவக்கி வைக்கிறார். மதியம், 12:45 மணிக்கு கார் மூலம் சேலம் செல்லும் முதல்வர் ஸ்டாலின், அங்கிருந்து விமானம் மூலம் சென்னை செல்கிறார்.

