சென்ட்ரல், எழும்பூர், தாம்பரத்தை தொடர்ந்து புதிய ரயில் முனையமாக மாறுகிறது பெரம்பூர்
சென்ட்ரல், எழும்பூர், தாம்பரத்தை தொடர்ந்து புதிய ரயில் முனையமாக மாறுகிறது பெரம்பூர்
ADDED : ஜூலை 25, 2024 12:56 AM
சென்னை:''பெரம்பூர் ரயில் நிலையம், 4வது புதிய முனையமாக மாற்றுவதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பு பணிகள் துவங்கப்படும்,'' என, தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் கூறினார்.
அவர் அளித்த பேட்டி:
தமிழகத்தில் புதிய பாதை, அகலப் பாதை, இரட்டைப் பாதை உள்பட பல்வேறு பணிகளுக்கு, 6,362 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ரயில்வே திட்டங்களுக்கு, சில இடங்களில் நிலம் கையகப்படுத்துவதில் உள்ள சிக்கலை தீர்க்க, மாநில அரசுடன் பேச உள்ளோம்.
'வந்தே பாரத்' ரயில் தற்போது தேவையான எண்ணிக்கையில் இயக்கப்படுகிறது. கூடுதல் ரயில்கள் தேவைப்பட்டால், சிறப்பு ரயில்கள், வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படும்.
சோதனை ஓட்டம்
சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில், 732 கோடியில் நடந்து வரும் மேம்பாட்டு பணிகள், மதுரை, ராமேஸ்வரம், கன்னியாகுமரி உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நடந்து வரும் மேம்பாட்டு பணிகள், அடுத்த மூன்று ஆண்டுகளில் முடியும்.
பாம்பன் ரயில்வே பாலம் பணி முடிந்து, சோதனை ஓட்டம் நடந்து வருகிறது. வரும் செப்., மாதத்தில் பயன்பாட்டிற்கு வரும். 40 மேம்பாலப் பணிகளில், ரயில்வேக்கான பணிகள் முடிந்துள்ளன. மாநில அரசு பணிகள் தான் நிலுவையில் உள்ளன. இந்த பணிகள் முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர, இரண்டு ஆண்டுகளாகும்.
கடற்கரை - எழும்பூர், 4வது புதிய பாதை பணியை, செப்., மாதத்தில் முடிக்க உள்ளோம். கிளாம்பாக்கம் ரயில் நிலையம் அமைக்கும் பணி அடுத்த ஆண்டு மார்ச்சில் முடியும். பயணியர் தேவை அதிகரித்து வருவதால், ரயில்களை இயக்க தற்போதுள்ள ரயில் முனையங்கள் போதாது.
விரிவான திட்ட அறிக்கை
எனவே, சென்னையில் 4வது ரயில் முனையமாக பெரம்பூர் ரயில் நிலையத்தை உருவாக்க, சர்வே பணிகள் நடக்கின்றன. இந்தப் பணிகள் ஒரு மாதத்தில் முடியும்.
ஏற்கனவே, 4வது முனையத்தை வில்லிவாக்கத்தில் உருவாக்க இருந்தோம். அங்கு போதிய நிலம் கிடைக்காததால் கைவிடப்பட்டது.
பெரம்பூரில் போதிய நிலம் இருப்பதால், இங்கு 4வது புதிய முனையம் அமைக்க, அடுத்த நான்கு மாதங்களில் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க உள்ளோம். ரயில்வே வாரியத்திடம் ஒப்புதல் கிடைத்த பின், பணிகளை மேற்கொள்வோம்.
வரும் 2028ல் புதிய முனையத்தை கொண்டு வர திட்டமிட்டுள்ளோம். மேலும், இங்கு இருந்து ரயில்கள் இயக்க வசதியாக, பெரம்பூர் - அம்பத்துார் இடையே, 5, 6 புதிய பாதைகளும் அமைக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின்போது, தெற்கு ரயில்வே கூடுதல் பொது மேலாளர் கவுசல் கிஷோர், சென்னை கோட்ட மேலாளர் விஸ்வநாத் ஈர்யா உடனிருந்தனர்.

