ADDED : மார் 14, 2025 12:08 AM
புதுச்சேரி:மாநில வருவாயை பெருக்கவே புதிய மதுபான தொழிற்சாலைகளுக்கு அனுமதி கொடுக்கப்பட்டது என எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளுக்கு முதல்வர் ரங்கசாமி பதிலடி கொடுத்தார்.
'புதுச்சேரியில் ஏற்கனவே மதுசேரியாக மாறிவிட்டது. திரும்பிய பக்கமெல்லாம் பார்களாக உள்ளன. இதுபோன்ற சூழ்நிலையில் கலாசாரத்தை சீர்குலைக்கும் வகையில் புதிதாக மதுபான தொழிற்சாலைகளுக்கு அரசு அனுமதி கொடுத்துள்ளது. இதில் பல கோடி கைமாறியுள்ளதால் சி.பி.ஐ., விசாரிக்க வேண்டும்' என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின.
இந்த விவகாரம், நேற்று புதுச்சேரி சட்டசபையில் பூதாகரமாக வெடித்தது.
தி.மு.க., எம்.எல்.ஏ., நாஜிம் பேசுகையில், 'புதிய மதுபான ஆலைகளுக்கு அனுமதி கொடுக்கப்பட்ட விஷயத்தை மக்கள் மத்தியில் வெளியிட வேண்டும்' என்றார்.
இதற்கு பதிலளித்து முதல்வர் ரங்கசாமி பேசியதாவது.
மாநிலத்தின் வருவாயை அதிகரிக்க வேண்டும். வேலை வாய்ப்புகளை பெருக்க வேண்டும் என்பதற்காக தான், புதுச்சேரியில் 6 மதுபான ஆலைகள் துவங்க தடையில்லா சான்றிதழ் வழங்கப்பட்டது. இதன்மூலம் அரசுக்கு ரூ.500 கோடி வருவாயும், 5 ஆயிரம் பெண்களுக்கு வேலைவாய்ப்பும் கிடைக்கும். தண்ணீரை உறிஞ்சாத, சுற்றுச்சூழலை பாதிக்காத நிலையில் தான், மது ஆலைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஆனால், இதனால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுவதோடு, அதிக அளவில் நிலத்தடி நீர் உறிஞ்சப்படும் என சிலர் பீதி கிளம்புகின்றனர். கடுமையான சூழலில் தான் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. சிலர் இதற்கு எதிராக அரசியல் செய்கின்றனர்; அது தவறு.
இந்த சூழ்நிலையில், புதுச்சேரியில் மதுவிலக்கு கொண்டு வரமுடியுமா என்று அனைத்து எம்.எல்.ஏ.,க்களும் சொன்னால், அதை ஏற்று, பூரண மதுவிலக்கை கொண்டு வர் நான் தயார். ஆனால், புதுச்சேரியில் அது சாத்தியமில்லை.
இவ்வாறு அவர் பேசினார்.