ADDED : ஏப் 20, 2024 02:27 AM
சென்னை:ராமேஸ்வரம் பாம்பனில், தேசிய கடலோர ஆராய்ச்சி மையத்தின் கள ஆய்வு அமைப்பை நிறுவும் பணிக்கு அனுமதி வழங்க, தமிழக கடலோர மண்டல ஒழுங்குமுறை குழுமம் பரிந்துரைத்து உள்ளது.
கடலோரப் பகுதிகளில் மீன் வளம் மற்றும் சூழலியல் பாதுகாப்பை உறுதி செய்ய, மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
சென்னையில் தேசிய கடலியல் ஆராய்ச்சி மையமான என்.ஐ.ஓ.டி., வளாகத்தில், தேசிய கடலோர ஆராய்ச்சி மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
விசாகப்பட்டினம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இதன் கிளைகள் செயல்படுகின்றன.
இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் தாலுகாவில், பாம்பன் கிராமத்தில் களநிலை ஆராய்ச்சி மையத்தை ஏற்படுத்த, தேசிய கடலோர ஆராய்ச்சி மையம் முடிவு செய்தது.
இதற்கான நிலம் தேர்வு உள்ளிட்ட பணிகள் முடிக்கப்பட்டுள்ளன.
இங்கு, கடலை ஒட்டிய பகுதியில் ஆராய்ச்சி மைய கட்டுமான பணிகள் மேற்கொள்ள, கடலோர மண்டல மேலாண்மை குழுமத்தின் அனுமதி பெற வேண்டும். இதற்காக இந்நிறுவனம் விண்ணப்பித்தது.
தமிழக கடலோர மண்டல மேலாண்மை குழுமம் இந்த விண்ணப்பங்களை ஆய்வு செய்து, இதற்கு ஒப்புதல் வழங்க முடிவு செய்தது.
இது தொடர்பாக, தமிழக அரசின் வாயிலாக, மத்திய அரசின் வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சகத்துக்கு பரிந்துரை அனுப்பப்பட்டுள்ளது.
மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சகம், இதற்கான இறுதி ஆணையை பிறப்பிக்க உள்ளதாக, கடலோர மண்டல மேலாண்மை குழும அதிகாரிகள் தெரிவித்தனர்.

