குட்கா முறைகேடு வழக்கில் சி.விஜயபாஸ்கர் மனு வாபஸ்!
குட்கா முறைகேடு வழக்கில் சி.விஜயபாஸ்கர் மனு வாபஸ்!
ADDED : நவ 20, 2026 06:23 PM

குட்கா முறைகேடு வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று கோரி முனனாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் தாக்கல் செய்திருந்த மனுவை வாபஸ் பெற அனுமதித்து, மனுவையும் சென்னை ஐகோர்ட் தள்ளுபடி செய்தது.
தடை செய்யப்பட்ட குட்கா, பான் மசாலா பொருட்களை விற்பனை செய்ய அனுமதித்தார், அதற்காக லஞ்சம் பெற்றார் என்பது குற்றச்சாட்டு ஆகும். முன்னாள் அமைச்சர்கள் சி. விஜயபாஸ்கர், பி.வி.ரமணா, முன்னாள் போலீஸ் உயரதிகாரிகள் உள்பட 26 பேர் மீது சிபிஐ வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறது.
வழக்கு விசாரணையை விரைந்து முடிக்க வேண்டும் என சென்னை ஐகோர்ட் உத்தரவும் பிறப்பித்து இருந்தது. ஆனால் இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று சி. விஜயபாஸ்கர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். மனுவில், புகையிலை தடை சட்டத்தின் சில பிரிவுகளை மேற்கோள்காட்டி இருந்தார்.
ஒரே மனுவில், இரு வெவ்வேறு கோரிக்கைகளை வி. விஜயபாஸ்கர் முன் வைத்திருந்தார். இம்மனு, தலைமை நீதிபதி தர்மாதிகாரி, நீதிபதி அருள்முருகன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. இரு வெவ்வேறு கோரிக்கைகளை ஒரே மனுவில் இணைத்து தாக்கல் செய்திருக்கக் கூடாது என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
அதை ஏற்ற விஜயபாஸ்கர் தரப்பு, மனுவை வாபஸ் பெறுவதாக தெரிவித்தது. நீதிமன்றம் அதற்கு அனுமதி அளித்து, தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
