சம்பள உயர்வு கோரிய டாக்டர்கள் மனு: தமிழக அரசு பதில் அளிக்க உத்தரவு
சம்பள உயர்வு கோரிய டாக்டர்கள் மனு: தமிழக அரசு பதில் அளிக்க உத்தரவு
ADDED : ஆக 28, 2024 06:07 AM

சென்னை : மத்திய அரசு டாக்டர்களுக்கு வழங்கப்படும் சம்பளத்துக்கு இணையாக, தமிழக அரசு டாக்டர்களுக்கும் வழங்க கோரிய வழக்கில், அரசு பதில் அளிக்க, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மத்திய அரசு டாக்டர்களுக்கும், மாநில அரசு டாக்டர்களுக்கும் இடையேயான சம்பள முரண்பாடுகளை களைய கோரியதை ஏற்று, 2009ல் அரசாணை பிறப்பிக்கப்பட்டது. இதை அமல்படுத்துவது குறித்து பரிந்துரை அளிக்க குழு அமைக்கப்பட்டது. அதன்படி, குழுவும் பரிந்துரைகளை அளித்தது.
அந்தப் பரிந்துரைகளை அமல்படுத்தாததால், உயர் நீதிமன்றத்தில், அரசு மருத்துவர்களுக்கான சட்ட போராட்டக்குழு சார்பில் வழக்கு தொடரப்பட்டது.
டாக்டர்கள் தொடர்ந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், குழு அளித்த பரிந்துரைகளின்படி டாக்டர்களின் கோரிக்கையை பரிசீலிக்க உத்தரவிட்டிருந்தது. இந்தாண்டு பிப்ரவரியில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இந்நிலையில், மே மாதம் மருத்துவக் கல்வி இயக்குனர், ஒரு உத்தரவை பிறப்பித்தார். அந்த உத்தரவு, 2009ல் பிறப்பித்த உத்தரவை அமல்படுத்த மறுக்கும் விதமாக உள்ளதால், அதை ரத்து செய்யக்கோரி, உயர் நீதிமன்றத்தில் அரசு மருத்துவர்களுக்கான சட்டப்போராட்டக் குழு தலைவர் டாக்டர் பெருமாள் பிள்ளை உள்ளிட்ட ஆறு டாக்டர்கள் வழக்கு தொடர்ந்தனர். அதில், 2009 ல் பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தவும் கோரப்பட்டது.
மனு, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன், விசாரணைக்கு வந்தது. மனுவுக்கு பதில் அளிக்கும்படி, தமிழக அரசுக்கு உத்தரவிட்டு, விசாரணையை, அக்., 28 க்கு நீதிபதி தள்ளி வைத்தார்.