ADDED : ஜூன் 26, 2024 07:20 AM

சென்னை :   அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் நேற்று, அக்கட்சியின் பொதுச்செயலர் பழனிசாமி தலைமையில், கவர்னர் ரவியை சந்தித்தனர். கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணம் தொடர்பாக, சி.பி.ஐ., விசாரணை கோரி மனு அளித்தனர்.
பின், பழனிசாமி அளித்த பேட்டி:
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து, 60 பேர் இறந்துள்ளனர்; 157 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தி.மு.க., ஆட்சி வந்த பின், இது இரண்டாவது சம்பவம்.
உரிய நடவடிக்கை
ஏற்கனவே விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில், கள்ளச்சாராயம் குடித்து 22 பேர் இறந்தனர். அப்போதே, முதல்வர் ஸ்டாலின், 'இனி தமிழகத்தில் கள்ளச்சாராய சாவு இருக்காது; உரிய நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.
கள்ளக்குறிச்சி மரணம் மிக மோசமானது. இச்சம்பவத்திற்கு தார்மீக பொறுப்பேற்று, முதல்வர் ராஜினாமா செய்ய வேண்டும். இச்சம்பவம் குறித்த விசாரணை நேர்மையாக நடக்க, சி.பி.ஐ., வசம் ஒப்படைக்க வேண்டும்.
ஏற்கனவே விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில், கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்கள் வழக்கு, சி.பி.சி.ஐ.டி., வசம் ஒப்படைக்கப்பட்டது. இதனால், எந்த பலனும் ஏற்படவில்லை. நேர்மையான விசாரணை நடக்க, வழக்கை சி.பி.ஐ., வசம் ஒப்படைக்க வேண்டும்.
அமோக விற்பனை
தமிழகம் முழுதும் போதைப்பொருள் நடமாட்டம் அதிகரித்துள்ளது, கள்ளச்சாராய விற்பனை அமோகமாக நடக்கிறது. கடந்த மூன்று நாட்களில், 876 சாராய வியாபாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். சாராய ஊறல், 6,000 லிட்டர் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இதை முன்கூட்டியே செய்திருந்தால், உயிரிழப்பு ஏற்பட்டிருக்காது. கல்வராயன் மலையில் வனத்துறைக்கு தெரியாமல், கள்ளச்சாராயம் காய்ச்ச முடியாது.
எனவே, அவர்களையும் விசாரணைக்கு உட்படுத்த வேண்டும். நிர்வாக திறமையற்ற அரசால், 60 உயிர்களை இழந்துள்ளோம்.
என் மீதான வழக்கில், தி.மு.க.,வைச் சேர்ந்த ஆர்.எஸ்.பாரதி, சி.பி.ஐ., விசாரணை கேட்கவில்லை. எதிர்க்கட்சியாக இருக்கும் போது, சி.பி.ஐ., விசாரிக்க வேண்டும் என்றார்.
ஆளுங்கட்சியானதும், சி.பி.ஐ., விசாரணை வேண்டாம் என்றார். மேலும், வழக்கை திரும்ப பெறுவதாக ஆர்.எஸ்.பாரதி கூறினார். நான் வழக்கை திரும்ப பெறாமல் தொடர்ந்து நடத்தி, நிரபராதி என்று நிரூபித்தேன்.
இவ்வாறு அவர் கூறினார்.

