விக்கிரவாண்டியில் விஜய் கட்சி மாநாடு அனுமதி கோரி எஸ்.பி., ஆபீசில் மனு
விக்கிரவாண்டியில் விஜய் கட்சி மாநாடு அனுமதி கோரி எஸ்.பி., ஆபீசில் மனு
ADDED : ஆக 28, 2024 08:36 PM

விழுப்புரம்:விழுப்புரத்தில் நடைபெற உள்ள தமிழக வெற்றிக் கழக மாநாட்டிற்கு அனுமதி மற்றும் பாதுகாப்பு கோரி அக்கட்சியின் மாநில பொதுச்செயலர் புஸ்சி ஆனந்த், கலெக்டர் மற்றும் எஸ்.பி., அலுவலகங்களில் மனு அளித்தார்.
ஏ.டி.எஸ்.பி., திருமாலிடம், அளித்த மனு விபரம்;
த.வெ.க.,வின் முதல் மாநில மாநாடு விழுப்புரம் அடுத்த வி.சாலை கிராமத்தில் வரும் செப்., 23ம் தேதி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறோம். மாநாட்டில் கட்சி தலைவர் விஜய் பங்கேற்கிறார்.
மாநாடு நடத்த 85 ஏக்கர் நிலம் வாடகைக்கு பெற்றுள்ளோம். மாநாட்டிற்கு 1.50 லட்சம் பேர் வருவார்கள் என, எதிர்பார்க்கிறோம். மாநாட்டிற்கு தமிழகம் முழுதும் இருந்து வரும் வாகனங்களை முறையாக நிறுத்த ஏற்பாடு செய்ய திட்டமிட்டுள்ளோம்.
இதற்காக விழுப்புரம்-சென்னை சாலையின் இருபுறமும் 68 ஏக்கர் நிலத்தை வாடகைக்கு பெற்றுள்ளோம். இரு சக்கர வாகனங்களை நிறுத்த தனியாக 5 ஏக்கர் நிலம் வாடகைக்கு பெற்றுள்ளோம்.
பொதுமக்களுக்கு இடையூறின்றி மாநாட்டை முறையாக நடத்துவதாக உறுதியளிக்கிறோம். எனவே, மாநாட்டிற்கு தேவையான முழு பாதுகாப்பை வழங்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து மாநாட்டிற்கு அனுமதி கோரி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் யோகஜோதியிடமும் மனு அளிக்கப்பட்டது.

