அறுவை சிகிச்சையில் வாலிபர் மரணம் நடவடிக்கை கோரி அமைச்சரிடம் மனு
அறுவை சிகிச்சையில் வாலிபர் மரணம் நடவடிக்கை கோரி அமைச்சரிடம் மனு
ADDED : ஏப் 28, 2024 05:30 AM
சென்னை: உடல் பருமன் அறுவை சிகிச்சையின் போது மகன் உயிரிழந்த சம்பவத்தில், டாக்டர் மீது நடவடிக்கை எடுக்கும்படி, மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சரிடம், தந்தை மனு அளித்து உள்ளார்.
புதுச்சேரி திருவள்ளூர் நகரைச் சேர்ந்தவர் ஹேமச்சந்திரன், 26. சென்னை பம்மலில் உள்ள தனியார் மருத்துவமனையில், உடல் பருமனை குறைப்பதற்கான அறுவை சிகிச்சை செய்த போது உயிரிழந்தார்.
அறுவை சிகிச்சை செய்த டாக்டர் மற்றும் மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்கும்படி, சென்னையில் அமைச்சர் சுப்பிரமணியனிடம், உயிரிழந்த வாலிபரின் தந்தை செல்வநாதன், நேற்று மனு அளித்தார்.
அதில் கூறியிருப்பதாவது:
டாக்டரின் ஆசைவார்த்தையை நம்பி, அறுவை சிகிச்சைக்கு சம்மதித்தோம்.
'சிறு அறுவை சிகிச்சை தான், எவ்வித ஆபத்தும், பக்க விளைவும் ஏற்படுத்தாது. அறுவை சிகிச்சை செய்த அன்று இரவே வீடு திரும்பலாம்' என, டாக்டர் கூறினார்.
அறுவை சிகிச்சைக்கு முன், இதயவியல், நுரையீரல், சர்க்கரை நோய், மயக்கவியல் உள்ளிட்ட பல்துறை டாக்டர்களின் ஆலோசனை பெற்றோம். சர்க்கரை அளவை கட்டுப்படுத்த சில ஆலோசனை வழங்கியதுடன், தொடர்ந்து நடைபயிற்சி, இன்சுலின் ஊசி போட வேண்டும் என்றும், அறிவுறுத்தப்பட்டது.
அறுவை சிகிச்சைக்கு, மயக்கவியல் டாக்டர் அனுமதி அளிக்காத நிலையில், அறுவை சிகிச்சை செய்தனர்.
அப்போது, என் மகனின் உயிருக்கு ஆபத்து இருப்பதாக கூறி, மற்றொரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு, 7.5 லட்சம் ரூபாய் வரை செலவு செய்தும், மகன் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
சம்பவம் குறித்து, நாங்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில், 'மேல் நடவடிக்கை வேண்டாம்' என எழுதிய கடிதத்தில் எங்களை கையெழுத்திட போலீசார் வலியுறுத்தினர்.
போதியளவு மருத்துவ வசதிகள் இல்லாத மருத்துவமனையில், அறுவை சிகிச்சை செய்து, மகன் இறப்புக்கு காரணமான டாக்டர் மற்றும் மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
'இதுகுறித்து விசாரணை கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்டவர்கள் தவறு செய்திருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும்' என, அமைச்சர் சுப்பிரமணியன் உறுதிஅளித்துள்ளார்.

