ஒரே கிராமத்தை சேர்ந்த இருவருக்கு மதுரை மருத்துவ கல்லுாரியில் இடம்
ஒரே கிராமத்தை சேர்ந்த இருவருக்கு மதுரை மருத்துவ கல்லுாரியில் இடம்
ADDED : ஆக 25, 2024 06:05 AM

காரைக்குடி: சிவகங்கை மாவட்டம், சாக்கோட்டை அருகே கமலை கிராமத்தைச் சேர்ந்த விவசாயி பெரியசாமி மகன் நாகராஜ், 17; மாற்றுத்திறனாளியான இவர், பீர்க்கலைக்காடு அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்தார்.
குடும்ப சூழ்நிலை காரணமாக வீட்டில் மாடுகளுக்கு தீவனம் வைத்து பராமரிப்பு செய்தும், விடுமுறை நாட்களில் தந்தைக்கு உதவியாக ஆடுகளை மேய்த்தும் நாகராஜ் படித்து வந்தார்.
பள்ளி ஆசிரியர்கள், 'நீட்' தேர்வுக்கு பயிற்சி அளித்தனர். பிளஸ் 2 தேர்வில், 435 மதிப்பெண்கள் பெற்றவர் அமராவதி புதுார் உழவர் பயிற்சி மையத்தில், மாவட்ட நிர்வாகம் சார்பில் நடந்த இலவச 'நீட்' பயிற்சி மையத்தில் தங்கி பயிற்சி பெற்றார்.
'நீட்' தேர்வில், 720க்கு 136 மதிப்பெண் எடுத்து, மாற்றுத்திறனாளிகளுக்கான 3 சதவீத இட ஒதுக்கீட்டில் மதுரை அரசு மருத்துவக் கல்லுாரியில் மருத்துவம் படிக்க வாய்ப்பு பெற்றுள்ளார்.
இதே கிராமத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளியான உடையப்பன் மகன் ரவி, 18, பீர்க்கலைக்காடு அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 படித்தார். ரவியை ஆசிரியர்கள் நீட் கோச்சிங் சென்டரில் சேர்த்தனர்.
'நீட்' தேர்வில் 597 மதிப்பெண் பெற்றதோடு, 7.5 சதவீத ஒதுக்கீட்டில் மதுரை அரசு மருத்துவக் கல்லுாரியில் மருத்துவம் படிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.
ஒரே கிராமத்தைச் சேர்ந்த இரு மாணவர்கள் பஸ் வசதி கூட இல்லாத நிலையில் சைக்கிளில் பள்ளிக்குச் சென்று, தங்கள் மருத்துவக் கனவை நனவாக்கியதை கிராம மக்களும், ஆசிரியர்களும் பாராட்டி வருகின்றனர்.