மேட்டூர் உபரி நீரால் ஏரிகளை நிரப்பும் திட்டம் முடக்கம் * அரசுக்கு பழனிசாமி கண்டனம்
மேட்டூர் உபரி நீரால் ஏரிகளை நிரப்பும் திட்டம் முடக்கம் * அரசுக்கு பழனிசாமி கண்டனம்
ADDED : ஜூலை 31, 2024 02:00 AM
சென்னை:மேட்டூர் அணைக்கு வரும் மழைக்கால வெள்ள உபரி நீரை, நீரேற்று திட்டம் வழியே, சரபங்கா வடிநில ஏரிகளை நிரப்பும் திட்டத்தை, தி.மு.க., அரசு முடிக்காததற்கு, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி, கண்டனம் தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:
மேட்டூர் அணை நிரம்பி, 120 அடியை கடந்ததும் வெளியேற்றப்படும் உபரி நீர், கடலில் கலந்து வீணாகும். அப்போது அணைக்கு வரும், மழைக்கால வெள்ள உபரி நீரை, நீரேற்று பாசனம் வழியே, சேலம் மாவட்டத்தில், சரபங்கா வடிநிலத்தில் உள்ள, 100 வறண்ட ஏரிகளுக்கு வழங்கும் திட்டத்தை, 565 கோடி ரூபாயில் செயல்படுத்த, அ.தி.மு.க., அரசில் திட்டமிடப்பட்டது.
கடந்த 2020ம் ஆண்டு மார்ச் 4ல், இத்திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினேன். மேட்டூர் அணைக்கு வரும் வெள்ள உபரி நீர், மின் மோட்டார்கள் வழியே நீரேற்றம் செய்யப்பட்டு, 12 கி.மீ., துாரத்தில் உள்ள, எம்.காளிப்பட்டி ஏரிக்கு குழாய் வழியே கொண்டு செல்லப்படும்.
இதனால் வெள்ளாளபுரம், கன்னந்தேரியில் அமைக்கப்படும், துணை நீரேற்று நிலையங்களில் இருந்து, மின் மோட்டார்கள் உதவியுடன் குழாய்கள் வழியாக, ஒன்பது ஒன்றியங்களில் உள்ள, 12 பொதுப்பணித் துறை ஏரிகள், 88 ஊராட்சி ஒன்றிய ஏரிகள், குட்டைகள் நிரம்பி, 4,300 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.
ஏரிகளை சுற்றியுள்ள பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து, அப்பகுதியில் விவசாயம், குடிநீர் மற்றும் கால்நடை வளர்ப்பு மேம்படும். இத்திட்டத்தின் முதற்கட்ட வேலைகள் முடிந்து, திப்பம்பட்டி பிரதான நிலையில் இருந்து, நீரேற்று முறையில் குழாய்கள் வழியே, 6 ஏரிகளுக்கு தண்ணீர் செல்லும் பணிகளை, 2021 பிப்., 27ல் துவக்கி வைத்தேன்.
தி.மு.க., ஆட்சிக்கு வந்து, 38 மாதங்கள் முடிந்த நிலையில், இத்திட்டத்தின் மீதமுள்ள பணிகள் முடிக்கப்படவில்லை. தற்போது மேட்டூர் அணை, 120 அடியை விரைவில் எட்டக்கூடிய நிலையில், அணையிலிருந்து வெளியேறும் உபரி நீர், வீணாக கடலில் கலக்கும் அவலத்தை, தி.மு.க., அரசு ஏற்படுத்தி உள்ளது.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

