ரூ.1 கோடி லஞ்ச வழக்கில் சிக்கிய தாசில்தார் சொத்தை முடக்க திட்டம்
ரூ.1 கோடி லஞ்ச வழக்கில் சிக்கிய தாசில்தார் சொத்தை முடக்க திட்டம்
ADDED : மே 20, 2024 12:08 AM
சென்னை: பெண் தாசில்தாருக்கு உடந்தையாக இருந்து, லஞ்சப்பணம் பெற்ற, அவரது கணவரான தலைமை காவலர் பிரவீன்குமார், முதல் நிலை கான்ஸ்டபிள் அருண்குமார் ஆகியோர், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள ராஜன் நகர், செல்வா நகர் செல்லும் பாதையில், ஈஞ்சம்பாக்கம் வெட்டுவாங்கேணி இணைப்பு சாலை உள்ளது.
இந்த சாலை, 40 அடி அகலம் உடையது. இந்த இணைப்பு சாலையை ஆக்கிரமித்து, 13 வீடுகள் கட்டப்பட்டு உள்ளன. இதனால், அந்தச் சாலை, 12 அடியாக குறுகி விட்டது.
இந்த ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என, அதே பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர் பொன் தங்கவேல், சோழிங்கநல்லுார் மண்டல அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்; நடவடிக்கை இல்லை.
அதனால், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உத்தரவு பெற்றார்.
அதற்கான நகலுடன், சென்னை அடையாறு பகுதியில் உள்ள, சென்னை மாநகராட்சி தெற்கு மண்டல வட்டார துணை கமிஷனரை சந்தித்து புகார் அளித்தார். புகார் மனு, அதே அலுவலகத்தில் நில அளவை பிரிவு தாசில்தாராக பணிபுரியும் சரோஜாவிடம் ஒப்படைக்கப்பட்டது.
அவர், புகார்தாரரிடம், 'நான் ஆக்கிரமைப்பை அகற்றி தருகிறேன். எனக்கு லஞ்சமாக, 1 கோடி ரூபாய் தர வேண்டும். மறுத்தால், ஆக்கிரமிப்பாளர்களுக்கு சாதகமாக செயல்படுவேன்' என்று மிரட்டி உள்ளார்.
பேரம் பேசிய அவர், '5 லட்சம் ரூபாயாவது தர வேண்டும். முதற்கட்டமாக, 3 லட்சம் ரூபாயை, சென்னை பரங்கிமலை ஆயுதப்படை பிரிவில் பணிபுரியும் என் கணவரான, தலைமை காவலர் பிரவீன் குமாரிடம் ஒப்படைக்க வேண்டும்' என்று கூறியுள்ளார்.
பிரவீன்குமாரும், பரங்கிமலை குற்றப்பிரிவு காவல் நிலைய முதல் நிலை கான்ஸ்டபிள் அருண்குமாரும், பொன் தங்கவேலை மிரட்டி, 3 லட்சம் ரூபாயை வாங்கி சரோஜாவிடம் ஒப்படைத்துள்ளனர். மூவரையும் லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
அவர்களில், பிரவீன்குமார், அருண்குமார் ஆகியோரை, 'சஸ்பெண்ட்' செய்து, கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோட் நேற்று உத்தரவிட்டார். லஞ்ச வழக்கில் முதன் முறையாக, சரோஜா, பிரவீன்குமார் ஆகியோரின் சொத்துக்களையும் முடக்க இருப்பதாக, லஞ்ச ஒழிப்பு போலீசார் தெரிவித்தனர்.

