ஏ.ஐ., வாயிலாக விடைத்தாள் மதிப்பீடு பல்கலைகளில் அமல்படுத்த திட்டம்
ஏ.ஐ., வாயிலாக விடைத்தாள் மதிப்பீடு பல்கலைகளில் அமல்படுத்த திட்டம்
ADDED : செப் 06, 2024 02:27 AM
சென்னை:''ஏ.ஐ., தொழில்நுட்பமான, செயற்கை நுண்ணறிவு வாயிலாக, பல்கலை தேர்வு விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் முறை மூன்று பல்கலைகளில் உள்ளது. இதை, அனைத்து பல்கலையிலும் செயல்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது,'' என, தமிழக திட்டக்குழு உறுப்பினர் செயலர் சுதா தெரிவித்தார்.
சி.ஐ.ஐ., எனப்படும் இந்திய தொழில் கூட்டமைப்பு தமிழகம் சார்பில், திறன் மேம்பாட்டு மாநாடு சென்னையில் நேற்று நடந்தது. இந்நிகழ்ச்சியில், தமிழக திட்டக்குழு உறுப்பினர் செயலர் சுதா பேசியதாவது:
உலகளாவிய தொழில்நுட்ப முன்னேற்றம் மற்றும் சந்தை தேவைகளுக்கு ஏற்ப, கல்வி வழங்குவதில் தமிழகம் முன்னணியில் உள்ளது. உயர்கல்வி முடித்து வேலைக்கு செல்லும் போது திறம்பட செயல்பட, பள்ளிகளில் இருந்தே திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்க வேண்டும் என, அரசு கருதுகிறது. அதற்கேற்ப பயிற்சி அளிக்கிறது.
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதுார் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உள்ள, 'சிப்காட்' தொழில் பூங்காக்களில், புத்தாக்க மையங்கள் துவக்கப்பட்டு உள்ளன. அங்கு மாணவர்கள், 'ஸ்டார்ட் அப்' நிறுவனங்கள், தொழில்முனைவோருக்கு தேவைப்படும் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. 'போர்ஜ்' நிறுவன ஆதரவுடன் மதுரையிலும் சிப்காட் புத்தாக்க மையம் அமைக்கப்பட உள்ளது.
தொழில்நுட்ப கண்டுபிடிப்பு மற்றும் திறன் மேம்பாட்டில், தமிழகம் முன்னணியில் உள்ளது. ஏ.ஐ., என்ற செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பம் வாயிலாக, பல்கலை தேர்வு விடைத்தாள் மதிப்பீடு செய்யும் முறை மூன்று பல்கலைகளில் உள்ளது.
இதை, அனைத்து பல்கலையிலும் செயல்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. விரைவில் செயல்பாட்டிற்கு வரும்.
இவ்வாறு பேசினார்.
சி.ஐ.ஐ., தமிழக பிரிவு தலைவர் ஸ்ரீவத்ஸ்ராம் பேசியதாவது:
தொழில்நுட்ப மாற்றத்திற்கு ஏற்ப இன்ஜினியர்கள் தங்களின் திறனை மேம்படுத்தி கொள்ள வேண்டும். கல்வி நிறுவனங்கள் உதவ வேண்டும். தமிழகத்தில், எஸ்.ஜி.டி.பி., எனப்படும், மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தியில், உற்பத்தி துறையின் பங்கு 20 சதவீதம்; 89 சதவீத இளைஞர்கள் படிக்கும் போதே, தொழில் நிறுவனங்களில் பயிற்சி பெறுகின்றனர். 'நான் முதல்வன்' திட்டம் வாயிலாக, மாணவர்களுக்கு சிறந்த முறையில் திறன் மேம்பாட்டு பயற்சி வழங்கப்படுகிறது.
படித்து முடித்து வேலைக்கு செல்வோருக்கு பயிற்சி அளிக்க ஒன்றரை ஆண்டு ஆகிறது. எனவே, தொழிற்சாலைகளின் தேவை அறித்து, அதற்கு ஏற்ப கல்வி நிறுவனங்களில் பாடத்திட்டங்கள் இருக்க வேண்டும்.
கல்வி நிறுவனங்களும், தொழில் நிறுவனங்களும் இணைந்து செயல்பட்டால், வேலை அளிக்கும் போது பயிற்சி காலம் குறையும்.
இவ்வாறு அவர் பேசினார்.