குடிநீர் வினியோகம் கண்காணிக்க 8,000 மீட்டர்கள் அமைக்க திட்டம்
குடிநீர் வினியோகம் கண்காணிக்க 8,000 மீட்டர்கள் அமைக்க திட்டம்
ADDED : மார் 03, 2025 06:23 AM
சென்னை : நகர்ப்புறம் மற்றும் ஊரக பகுதிகளில், குடிநீர் வினியோகத்தின் அளவை கண்காணிக்க, முதற் கட்டமாக, 8,000 மீட்டர்கள் மற்றும் ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையம் அமைக்க, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
சென்னை தலைமை செயலகத்தில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலர் கார்த்திகேயன் தலைமையில், சமீபத்தில் ஆய்வு கூட்டம் நடந்தது.
இதில், ஜல்ஜீவன் திட்டம், கோடை காலத்தில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படாமல் தடுத்தல் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டது.
பின், அதிகாரிகள் கூறியதாவது:
குடிநீர் வினியோகம் செய்வதை, அந்தந்த உள்ளாட்சிகள் மேற்கொள்கின்றன. இதில், கூட்டு குடிநீர் போன்ற பெரிய திட்டங்களில், குடிநீர் எவ்வளவு வினியோகிக்கப்படுகிறது என்ற விபரம் உள்ளது.
அதேநேரம், உள்ளாட்சி அமைப்புகளால் நிர்வகிக்கப்படும் பகுதிகளில், தினமும் பொது மக்களுக்கு தேவையான குடிநீர் வினியோகிக்கப்படுகிறதா என்ற விபரம் இல்லை.
இதை தவிர்க்க முதற்கட்டமாக, 8,000 இடங்களில் மீட்டர்கள் அமைக்கப்படும். இதன் வாயிலாக, மேல்நிலை தொட்டியில் இருந்து, தினமும் எவ்வளவு குடிநீர் வினியோகிக்கப்படுகிறது என்ற விபரத்தை தெரிந்துகொள்ள முடியும்.
இதில், மத்திய, மாநில அரசுகள் வழங்கியுள்ள அளவில், மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்வதையும் உறுதிப்படுத்த முடியும்.
அத்துடன், குடிநீர் தொடர்பாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கும் வகையிலும், சீரான குடிநீர் வினியோகத்தை கண்காணிக்கும் வகையிலும், ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையமும் அமைக்கப்பட உள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.