பிரபாகரன் பெயரில் உறுதிமொழி: நாம் தமிழர் கட்சி வேட்பாளரால் சர்ச்சை
பிரபாகரன் பெயரில் உறுதிமொழி: நாம் தமிழர் கட்சி வேட்பாளரால் சர்ச்சை
ADDED : மார் 27, 2024 07:08 AM

சிவகங்கை: சிவகங்கையில் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்த சிவகங்கை தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் எழிலரசி உறுதிமொழி ஏற்ற போது தலைவர் பிரபாகரன் ஆணையாக என வாசித்தது சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது.
நாம் தமிழர் கட்சி வேட்பாளர் எழிலரசி நேற்று மதியம் 12:05 மணிக்கு கலெக்டர் ஆஷா அஜித்திடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். கலெக்டர் வழங்கும் உறுதி மொழியை தான் வேட்பாளர் ஏற்க வேண்டும். அதன் முடிவில் 'கடவுள் அறிய, உளமாற உறுதி அளிக்கிறேன்' என வாசிக்க வேண்டும். ஆனால் எழிலரசி உறுதி மொழி ஏற்கையில் 'தமிழ் மீதும், தலைவர் பிரபாகரன் மீதும் ஆணையாக உறுதி அளிக்கிறேன்' என வாசித்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.
எழிலரசி கூறுகையில், ''எங்கள் கொள்கையின்படி பிரபாகரன் கடவுள். இதனால் அவர் பெயரை கூறி உறுதிமொழி எடுத்தேன். விடுதலைப்புலி தலைவர் என குறிப்பிடவில்லை. நாகப்பட்டினத்தில் எங்கள் வேட்பாளர்கள் இப்படி தான் உறுதி மொழி ஏற்றார்,'' என்றார்.
கலெக்டர் ஆஷா அஜித் கூறுகையில், ''நாங்கள் கொடுத்த உறுதி மொழியை தான் வாசிக்க வேண்டும். அவர் அதை வாசிக்கவில்லை என்றால் என்ன செய்ய முடியும்,'' என்றார்.

