முதல்வர் ஸ்டாலினுக்கு தோல்வி பயம் வந்துவிட்டது: சொல்கிறார் இ.பி.எஸ்.,
முதல்வர் ஸ்டாலினுக்கு தோல்வி பயம் வந்துவிட்டது: சொல்கிறார் இ.பி.எஸ்.,
UPDATED : ஏப் 14, 2024 06:55 PM
ADDED : ஏப் 14, 2024 06:22 PM

கள்ளக்குறிச்சி: முதல்வர் ஸ்டாலினுக்கு தோல்வி பயம் வந்துவிட்டது என அதிமுக பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., கூறினார்.
கள்ளக்குறிச்சி தொகுதி அதிமுக வேட்பாளர் குமரகுருவை ஆதரித்து, தேர்தல் பிரசாரத்தில் இ.பி.எஸ்., பேசியதாவது: ஓராயிரம் ஸ்டாலின் வந்தாலும் அதிமுகவை ஒன்றும் செய்ய முடியாது. அதிமுகவை பற்றி யார் தவறாக பேசினாலும் அவர்கள் இருக்கும் இடம் தெரியாமல் போய்விடுவார்கள். அதிமுக தெய்வீக சக்தி வாய்ந்த கட்சி. தேர்தல் வந்துவிட்டதால் முதல்வர் ஸ்டாலின் புளுகிக் கொண்டிருக்கிறார். முதல்வர் ஸ்டாலின் அவதூறுகளை கட்டவிழ்த்து விடுகிறார்.
தோல்வி பயம்
அதிமுகவை அழிக்க இந்த பூமியில் எவரும் பிறக்கவில்லை. அழிக்க நினைத்தவர்கள் அழிந்துபோவார்கள். நீட் தேர்வு விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலின் பச்சை பொய் சொல்லி வருகிறார். முதல்வர் ஸ்டாலினுக்கு தோல்வி பயம் வந்துவிட்டது.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை அமைக்க நிலம் கொடுத்தது திமுக. தமிழகத்தில் 3 ஆண்டுகளாக குடும்ப ஆட்சி தான் நடந்து கொண்டு இருக்கிறது. தமிழகத்தை முதல்வர் ஸ்டாலின், உதயநிதி உட்பட 4 முதல்வர்கள் ஆள்கின்றனர்.
தி.மு.க., ஆட்சியில் துப்பாக்கிச்சூடு;
திமுக ஆட்சியில் பல துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.விவசாய மின் கட்டணம் ஒரு பைசா குறைக்கக்கோரி போராடிய விவசாயிகளை குருவி போல் சுட்டுக்கொன்றது உள்ளிட்ட பல துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் தி.மு.க., ஆட்சியில் நடந்திருக்கின்றன; என்னிடம் பட்டியல் இருக்கிறது.
சம்பள உயர்வு கோரி திருநெல்வேலியில் போராடிய மாஞ்சோலை தோட்டத் தொழிலாளர்கள் உயிரிழப்புக்கு காரணமானதும் தி.மு.க., அரசு.
விளம்பரம் தேடும் உதயநிதி
மதுரை எய்ம்ஸ் விவகாரத்தில் திமுக எம்.பிக்கள் பார்லிமென்டில் தூங்கி கொண்டு இருந்தார்களா?. உதயநிதி ஒற்றை செங்கல்லை தூக்கி காட்டிக் கொண்டே வருகிறார். ஒற்றை செங்கல்லை தூக்கிக் கொண்டு உதயநிதி விளம்பரம் தேடி வருகிறார். முடிக்காத திட்டத்தின் செங்கல்லை தூக்கி திரியும் உதயநிதி முடித்த கட்டங்களை திறக்கலாமே?.
ஏழை, எளிய மக்களுக்காக திட்டங்களை கொண்டு வந்து அதிமுக அரசு செயல்படுத்தியது. அதிமுகவை முடக்க முதல்வர் ஸ்டாலின் முயற்சி செய்து வருகிறார். திமுக அரசு எத்தனை வழக்குகள் போட்டாலும் சந்தித்து தூள் தூளாக்குவோம். இவ்வாறு அவர் பேசினார்.

