ADDED : ஏப் 20, 2024 10:22 PM
சென்னை:தேர்தல் நடத்தை விதிமுறையை மீறியதாக, நடிகர் விஜய் மீது போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் செய்யப்பட்டு உள்ளது.
தமிழக வெற்றிக் கழக தலைவரும், நடிகருமான விஜய் தி கோட் படத்தின் படப்பிடிப்புக்காக ரஷ்யா சென்றிருந்தார். லோக்சபா தேர்தலில் ஓட்டு போடுவதற்காக ரஷ்யாவில் இருந்து சென்னை வந்தார்.
நீலாங்கரை கபாலீஸ்வரர் நகரில் உள்ள ஓட்டுச்சாவடி மற்றும் அவரது வீடு முன் ரசிகர்கள் காலை முதலே குவிந்தனர். இதனால், ஓட்டுச்சாவடி முன், போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது.
மதியம் 12:30 மணிக்கு வீட்டில் இருந்து காரில் நடிகர் விஜய் ஓட்டுச்சாவடிக்கு வந்தார். ரசிகர்களும் விஜய் காரை பின்தொடர்ந்து வந்தனர். ஓட்டுச்சாவடிக்கு விஜய் வந்தபோது, ரசிகர் கூட்டம் அலைமோதியது. பலத்த போலீஸ் பாதுகாப்புடன் விஜய் ஓட்டு போட்டு விட்டுச் சென்றார்.
இந்நிலையில், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், சமூக ஆர்வலர் செல்வம் கொடுத்து உள்ள மனு:
பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில், 200க்கும் மேற்பட்ட ரசிகர்களுடன் தேர்தல் விதிமுறைகளை மீறி விஜய் ஓட்டுச்சாவடிக்குள் சென்றார்.
அங்கு ஓட்டு போட காத்திருந்தவர்களை அவமதிக்கும் வகையில், வரிசையில் செல்லாமல் போலீஸ் உதவியுடன் பூத்துக்குள் சென்று ஓட்டு போட்டுள்ளார். இதுகுறித்து நடிகர் விஜய் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

