ADDED : ஆக 24, 2024 01:57 AM
'அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி அறிக்கை:
சிவராமன் மற்றும் அவரது தந்தை என இருவரின் மரணங்களும் சந்தேகத்திற்கு உரியதாக உள்ளன. சிறப்பு புலனாய்வு குழு விசாரணையில், சிவராமன் இந்த பாலியல் குற்றத்தில் தொடர்புடைய முக்கிய புள்ளிகளின் பெயர்களை வெளியில் கூறி விடுவாரோ என்ற அச்சத்தில், அவர் கொல்லப்பட்டு இருக்கலாமோ என, பொது மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
போலி என்.சி.சி., பயிற்சி முகாம்கள் எத்தனை ஆண்டுகளாக நடக்கின்றன; இதுவரை எத்தனை முறை நடந்துள்ளன; வேறு மாவட்டங்களில் முகாம்கள் நடத்தப்பட்டு உள்ளனவா; சிவராமன் தவிர வேறு யாரேனும் இதில் சம்பந்தப்பட்டு உள்ளனரா என்பது போன்ற கேள்விகளுக்கு விடை அளிக்கக்கூடிய சிவராமன் தற்கொலை செய்து கொண்டது சந்தேகத்தை எழுப்பி உள்ளது.
இந்த வழக்கில் தொடர்புடைய உண்மை குற்றவாளிகளை காப்பாற்ற முயற்சிக்கப்படுகிறதா என்ற சந்தேகம் மக்கள் இடையே எழுகிறது. கேள்விகளுக்கு தி.மு.க., அரசிடம் முழுமையான பதில் வரவில்லை. இந்நிலையில், தந்தை - மகன் இறந்திருப்பது, காவல் துறை நடத்தும் நாடகமோ என்ற சந்தேகத்தை எழுப்புகிறது.
மாணவியர் பாலியல் வன்முறை தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு புலனாய்வு குழு, இது தொடர்பாக விசாரித்து, கேள்விகளுக்கு எல்லாம் உண்மையான விடைகளை வெளிக்கொண்டு வர, முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுஉள்ளது.

