ADDED : பிப் 27, 2025 11:36 PM
சென்னை:விஜயன் கொலை வழக்கில் தேடப்படும் பெண், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடுகளில் பதுங்கி இருப்பது தெரியவந்துள்ளது.
எம்.ஜி.ஆரின் வளர்ப்பு மகள் சுதாவின் கணவர் விஜயன், 2008, ஜூன் 4ம் தேதி இரவு, சென்னை கோட்டூர்புரம் பகுதியில் காரில் சென்றபோது, மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டார். சி.பி.சி.ஐ.டி., போலீஸ் விசாரணையில், சொத்து தகராறு காரணமாக, இந்த கொலை நடந்தது தெரியவந்தது.
இவ்வழக்கில், விஜயன் மனைவி சுதாவின் தங்கை பானு உட்பட, ஏழு பேர் கைதாகினர். இவர்களுக்கு, செஷன்ஸ் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது.
இதை எதிர்த்து மேல்முறையீடு செய்த பானு மற்றும் கார்த்திக் என்ற நபர் விடுதலை செய்யப்பட்டனர்.
விஜயன் கொலைக்கு முக்கிய நபராக செயல்பட்டவர்களில் ஒருவராக, புவனா என்ற புவனேஸ்வரி இருந்துள்ளார். அவருக்கு தற்போது, 54 வயதாகிறது. கடந்த 2008ல் தலைமறைவான புவனேஸ்வரி எங்கிருக்கிறார் என்பது துப்பு துலக்க முடியாமல் இருந்தது.
தற்போது, ஐக்கிய அரபு எமிரேட்சில் பதுங்கி இருப்பதாகவும், அங்கு ஜவுளி வியாபாரத்தில் ஈடுபட்டு வருவதும் தெரியவந்துள்ளது. அவரை கைது செய்யும் நடவடிக்கைகளில், சி.பி.சி.ஐ.டி., போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். இதை அறிந்த புவனேஸ்வரி, சென்னை உயர் நீதிமன்றம் வாயிலாக முன்ஜாமின் பெறும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது.