கல்லுாரி அருகில் உள்ள வீடுகளில் போலீஸ் வேட்டை: போதை பொருளுடன் 19 மாணவர்கள் கைது
கல்லுாரி அருகில் உள்ள வீடுகளில் போலீஸ் வேட்டை: போதை பொருளுடன் 19 மாணவர்கள் கைது
ADDED : செப் 01, 2024 05:14 AM

சென்னை: சென்னை, செங்கல்பட்டு புறநகர் பகுதிகளில் உள்ள தனியார் மென்பொருள் நிறுவன ஊழியர்களின் குடியிருப்புகள் மற்றும் வெளிமாநில மாணவர்கள் தங்கியுள்ள வீடுகளில், நேற்று 1,000க்கும் மேற்பட்ட போலீசார், கஞ்சா வேட்டையில் ஈடுபட்டனர்.
கஞ்சா பொட்டலங்களுடன் பிடிபட்ட 19 மாணவர்கள், கஞ்சா விற்பனை செய்த தாபா உரிமையாளர் உள்பட, 21 பேர் கைது செய்யப்பட்டனர்.
சென்னை புறநகரில் உள்ள கூடுவாஞ்சேரி, பொத்தேரி உள்ளிட்ட பகுதிகளில், தனியார் மென்பொருள் நிறுவனங்கள், தனியார் பல்கலை உள்ளிட்டவை உள்ளன. இங்குள்ள எஸ்.ஆர்.எம்., பல்கலையில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் மாணவர்கள் பயின்று வருகின்றனர்.
பல்கலை விடுதிகள் மற்றும் பல்கலையை சுற்றியுள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்புகளில், அந்த மாணவர்கள் தங்கி உள்ளனர்.
மாணவ -- மாணவியர், மென்பொருள் நிறுவன ஊழியர்கள், வட மாநில தொழிலாளர்களை குறிவைத்து, இப்பகுதிகளில் பல ஆண்டுகளாக கஞ்சா, போதை மாத்திரைகள் உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனை அதிகளவில் நடந்து வருகின்றன.
குறிப்பாக, எஸ்.ஆர்.எம்., பல்கலை மாணவர்கள் தங்கியுள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில், கஞ்சா விற்பனை செய்வது தொடர்பாக, வெளிமாநில மாணவர்கள், உள்ளூர் ரவுடிகள், முன்னாள் மாணவர்களுக்கு இடையே அடிதடி சம்பவங்கள் நடப்பது வழக்கம்.
கடந்த சில மாதங்களாக, பொத்தேரி ஏரிக்கரை உள்ளிட்ட பொது இடங்களில் கஞ்சா பயன்பாடு அதிகரித்துள்ளதாக, தாம்பரம் போலீஸ் கமிஷனரக அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து, தாம்பரம் கூடுதல் கமிஷனர் மகேஷ்வரி தலைமையில், 1,000த்துக்கும் மேற்பட்ட போலீசார், நேற்று அதிகாலை 5:30 மணிக்கு, பொத்தேரி பகுதியில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பை சுற்றிவளைத்தனர்.
இந்த குடியிருப்பில் இருந்த 500 வீடுகளிலும் அதிரடி சோதனை நடத்தினர். அங்கிருந்து வெளியில் செல்வோர் மற்றும் புதிதாக வருவோரின் வாகனங்களை முழுமையாக சோதனை செய்தனர்.
இதில், பல்வேறு வீடுகளில், சிறு சிறு கஞ்சா பொட்டலங்கள் கைப்பற்றப்பட்டன. 500 கிராம் கஞ்சா, கஞ்சா சாக்லெட் - 6, கஞ்சா எண்ணெய் 20 மி.லி., கஞ்சா புகைக்க பயன்படும் மிஷின் 8, ஹோக் பவுடர் -6 கிலோ உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.
இது தொடர்பாக, மாணவர்கள், கஞ்சா வியாபாரிகள் உள்ளிட்ட 21 பேரிடம், கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் எங்கே வாங்கப்பட்டன; விற்பது யார் என்பது தொடர்பாக, போலீசார் விசாரித்து வருகின்றனர்.
போலீசார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
பொத்தேரி பகுதியில் உள்ள அபோட் வேல்யூ அடுக்குமாடி குடியிருப்பில், நேற்று 168 குழுக்களாக 1,000 காவலர்களுடன் நடத்தப்பட்ட சோதனையில், கஞ்சா, கஞ்சா சாக்லெட் கைப்பற்றப்பட்டது. இதில், 20 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, கஞ்சா சாக்லேட் விற்பனை செய்த, பொத்தேரியில் உள்ள தாபா உரிமையாளரான, உ.பி.,யை சேர்ந்த டப்லு உட்பட, 21 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
மேலும், அடுக்குமாடி குடியிருப்பு பகுதிகளில், 60 இரு சக்கர வாகனங்கள், ஒரு கார் உள்ளிட்டவை, யாரும் உரிமை கோரப்படாதவைகளாக நிறுத்தப்பட்டு உள்ளன. இதன் உரிமையாளர்கள் குறித்து ஆய்வு செய்து வருகிறோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.