ஜாதி குறித்த பேச்சால் சிக்கல் சீமானுக்கு போலீசார் சம்மன்..
ஜாதி குறித்த பேச்சால் சிக்கல் சீமானுக்கு போலீசார் சம்மன்..
ADDED : செப் 05, 2024 01:51 AM
சென்னை: எஸ்.சி., - எஸ்.டி., வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ், வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள சீமானுக்கு, போலீசார், 'சம்மன்' அனுப்பி உள்ளனர்.
முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்து, பாடல் ஒன்றை பாடிய நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், குறிப்பிட்ட ஜாதியை மையப்படுத்தி சில வார்த்தைகளை பயன்படுத்தி இருந்தார்.
இது குறித்து சீமான் மீது வழக்குப் பதிவு செய்து, அவர் மீது விசாரணை நடத்த வேண்டும் எனக் கோரி, சென்னை பட்டாபிராம் போலீஸ் நிலையத்தில் வழக்கறிஞர் அபேஷ் புகார் கொடுத்திருந்தார்.
இந்நிலையில், மாநில எஸ்.சி., - எஸ்.டி., கமிஷன் இந்த விஷயத்தில், வழக்குப்பதிவு செய்து சீமான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தது.
இதன் அடிப்படையில் சென்னை பட்டாபிராம் போலீசார், சீமான் மீது, எஸ்.சி., - எஸ்.டி., வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்துள்ளனர்.
விசாரணை அதிகாரியாக உதவி கமிஷனர் சுரேஷ்குமார் நியமிக்கப்பட்டு உள்ளார். அவர் தலைமையில், போலீசார் நேற்று விசாரணையை துவக்கி உள்ளனர். அவர்கள், விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி சீமானுக்கு சம்மன் அனுப்பி உள்ளனர்.