அடிக்கடி மாற்றப்படும் ஐ.ஏ.எஸ்.,களால் மாசு கட்டுப்பாடு வாரிய பணிகள் பாதிப்பு
அடிக்கடி மாற்றப்படும் ஐ.ஏ.எஸ்.,களால் மாசு கட்டுப்பாடு வாரிய பணிகள் பாதிப்பு
ADDED : ஏப் 12, 2024 09:39 PM
சென்னை:தமிழக மாசு கட்டுப்பாடு வாரியத்தில் உறுப்பினர்களாக நியமிக்கப்படும் பிற துறை ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் அடிக்கடி மாற்றப்படுவதால், முடிவுகள் எடுப்பதில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
புதிதாக தொழிற்சாலைகள் துவங்கவும், தொடர்ந்து இயக்கவும், மாசு கட்டுப்பாடு வாரிய அனுமதி அவசியம். இதற்காக வரும் விண்ணப்பங்களை ஆய்வு செய்ய, வல்லுனர்கள் அடங்கிய குழு உள்ளது.
கொள்ளை முடிவு
இக்குழுவின் அறிக்கை அடிப்படையில், வாரிய நிர்வாகக் குழு தான் கொள்கை முடிவுகளை எடுக்க வேண்டும்.
இதற்காக, 17 பேர் அடங்கிய நிர்வாகக் குழு உள்ளது. இதில், தலைவர், உறுப்பினர் செயலர் தவிர்த்து, பிற துறை உயரதிகாரிகள் என்ற அடிப்படையில், அலுவல் ரீதியான உறுப்பினர்கள் உள்ளனர். இதற்கு அப்பால் பொதுவான அடிப்படையில் உறுப்பினர்களும் உள்ளனர்.
இந்த உறுப்பினர்களின் செயல்பாடு குறித்து, சென்னையைச் சேர்ந்த சி.ஏ.ஜி., எனப்படும், நுகர்வோர் அமைப்பு ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது.
அதில் கூறப்பட்டு உள்ளதாவது:
மாசு கட்டுப்பாடு வாரிய நிர்வாகக் குழுவின், 2017 - 22 வரையிலான செயல்பாடுகள் குறித்த விபரங்கள், தகவல் அறியும் உரிமை சட்டப்படி கோரப்பட்டன.
இவற்றுக்கு மாசு கட்டுப்பாடு வாரிய அதிகாரிகள் அளித்த பதில்களில் இருந்து, இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டு உள்ளது.
வனம் மற்றும் சுற்றுச்சூழல், நிதி, நகர் மற்றும் ஊரமைப்பு, தொழில், மக்கள் நல்வாழ்வு மற்றும் சுகாதாரம், மின் வாரியம், தொழில் மற்றும் வர்த்தகம் ஆகிய துறைகளின் உயரதிகாரிகள், மாசு கட்டுப்பாடு வாரிய நிர்வாகக் குழு உறுப்பினர்களாக உள்ளனர்.
இவர்களில் குறைந்தபட்சம், ஐந்து துறை உயரதிகாரிகளாவது பங்கேற்றால் மட்டுமே, மாசு கட்டுப்பாடு வாரிய கூட்டத்தில் கொள்கை முடிவுகள் எடுக்க முடியும். அந்தந்த துறைகள் தொடர்பாக, நிர்வாக காரணங்களுக்காக அரசு எடுக்கும் இடமாறுதல் நடவடிக்கைகள், மாசு கட்டுப்பாடு வாரிய செயல்பாடுகளில் எதிரொலிக்கின்றன.
இந்த வகையில், நகர் மற்றும் ஊரமைப்பு துறை சார்பில் வரும் உறுப்பினர், 10 முறை மாற்றப்பட்டு உள்ளார்.
கவனம் தேவை
நிதி, வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை உறுப்பினர்கள் தலா ஏழு முறையும், தொழில் திட்டங்களுக்கு அனுமதி வழங்கும் வழிகாட்டி குழு உறுப்பினர், ஆறு முறையும் மாற்றப்பட்டுள்ளனர்.
குறுகிய காலகட்டத்தில் இவ்வாறு அடிக்கடி உறுப்பினர்கள் மாற்றப்பட்டதால், கொள்கை முடிவுகள் எடுப்பதில் தாமதம் ஏற்படுவதாக தெரியவந்துள்ளது.
மாசு கட்டுப்பாடு வாரியத்தின் பணிகள் முழு திறனுடன் தொய்வின்றி நடக்க, உறுப்பினர்களின் பங்களிப்பு மிக முக்கியம். அந்த வகையில், இதன் உறுப்பினர்களாக உள்ள பிற துறை உயரதிகாரிகள் அடிக்கடி மாற்றப்படுவதில், அரசு நிர்வாகம் உரிய கவனம் செலுத்த வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

