பொன்னுக்கு வீங்கி வைரஸ் பாதிப்பு அதிகரிப்பு கோவை பள்ளிக்கு 12ம் தேதி வரை லீவு
பொன்னுக்கு வீங்கி வைரஸ் பாதிப்பு அதிகரிப்பு கோவை பள்ளிக்கு 12ம் தேதி வரை லீவு
ADDED : மார் 09, 2025 02:32 AM
கோவை: பொன்னுக்கு வீங்கி எனும் மம்ஸ் பாதிப்புகள் அதிகரித்து வரும் சூழலில், தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டியது அவசியம் என, இந்திய குழந்தைகள் நல மருத்துவர்கள் கூட்டமைப்பின் தமிழக தலைவர் டாக்டர் ராஜேந்திரன் எச்சரித்துள்ளார்.
கோவை தனியார் பள்ளி ஒன்றில், கடந்த சில தினங்களில், 21 குழந்தைகள் பொன்னுக்கு வீங்கியால் பாதிக்கப்பட்டனர்.
பிற மாணவர்களுக்கு பரவுவதை தடுக்கும் வகையில், பள்ளி நிர்வாகம் வரும் 12ம் தேதி வரை விடுமுறை அறிவித்துள்ளது.
இந்திய குழந்தைகள் நல மருத்துவர் கூட்டமைப்பு தமிழக தலைவர் டாக்டர் ராஜேந்திரன் கூறியதாவது:
பொன்னுக்கு வீங்கி குழந்தைகளுக்கு அதிகம் ஏற்படும் தொற்று பாதிப்பு. சரியான முன்னெச்சரிக்கை, தடுப்பு நடவடிக்கை இல்லை எனில், பல்வேறு பின்விளைவுகளை ஏற்படுத்தலாம்.
மத்திய சுகாதாரத்துறை, குழந்தை பிறந்தது முதல் போட வேண்டிய தடுப்பூசிகள் மற்றும் சொட்டு மருந்துகள் பற்றிய பரிந்துரை அட்டவணை அடிப்படையிலேயே அரசு தரப்பில் தடுப்பூசிகள் செலுத்தப்படுகின்றன.
இவற்றில், ஏழு வகை தடுப்பூசிகள் விடுபட்டுள்ளன; பொன்னுக்கு வீங்கியும் ஒன்று.
இப்பாதிப்பு வந்து, பொதுவாக ஒரு வாரத்திற்குள் நோயின் தீவிரம் குறையும். சில குழந்தைகளுக்கு செவித்திறன் குறைவு, மூளைக்கோளாறு, விதைப்பை அழற்சி, மூளைக்காய்ச்சல் ஆகிய தீவிர பாதிப்புகளையும் ஏற்படுத்தக்கூடும்.
இதற்கு எம்.எம்.ஆர்., தடுப்பூசி அவசியம். இத்தடுப்பூசி, குழந்தை பிறந்த 9, 15 மாதங்கள் மற்றும் 5 வயதில் மூன்று முறை தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும்.
அரசு தரப்பில் இதற்கான தடுப்பூசியை, பட்டியலில் இணைக்க வேண்டும். இச்சமயத்தில் இத்தடுப்பூசியை தனியார் மருத்துவமனைகளில் போட்டுக்கொள்ள விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
இவ்வாறு, அவர் கூறினார்.