ADDED : மே 27, 2024 04:07 AM
சென்னை : 'தி.மு.க., ஆட்சிக்கு வரும் போதெல்லாம், மின் வாரியமும், எரிசக்தி துறையும், குரங்கு கையில் கிடைத்த பூ மாலையாக மாறி, சிக்கி சீரழிவது வாடிக்கையாகி விட்டது' என, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:
அ.தி.மு.க., ஆட்சியில், அனைவருக்கும், 100 யூனிட் இலவச மின்சாரம்வழங்கப்பட்டது. ஒரு வீட்டில் இரு மின் இணைப்புகள் இருந்தால், வீட்டின் உரிமையாளரும், வாடகைதாரரும் இலவச மின்சாரம் பெற்று வந்தனர்.
தற்போது, வீட்டின் உரிமையாளர் பெயரில், ஒரு மின் இணைப்பு மட்டுமே அனுமதிக்க உள்ளதாக செய்திகள் வருகின்றன.
ஒரு வீட்டில் இரு மின் இணைப்பு இருந்து, மின் ஊழியர்கள் கணக்கெடுக்க வரும் போது, வீட்டின் உரிமையாளர் ஒரு பகுதியிலும், வாடகைதாரர் மற்றொரு பகுதியிலும் குடியிருந்தால், இரு மின் இணைப்புகளுக்கும் இலவச மின்சாரம் வழங்கப்படும்.
வாடகைதாரர் வீட்டை காலி செய்து விட்டால், வீட்டு உரிமையாளர் பெயரில் உள்ள, இரண்டு மின் இணைப்புகளில் ஒன்று துண்டிக்கப்படும்.
மீண்டும் வாடகைக்கு வேறொருவர் வந்தால், உரிமையாளர் மீண்டும் புது மின் இணைப்பிற்கு விண்ணப்பிக்க வேண்டும். வைப்புத் தொகை, முன்பணம் போன்றவற்றை செலுத்தி, புது மின் இணைப்பு வருவதற்குள், வாடகைதாரர் வீட்டை காலி செய்து விடுவார்.
இல்லையெனில், வீட்டு உரிமையாளர்கள் தங்களிடம் இருக்கும் ஒரே மின் இணைப்பில், வாடகைதாரர்களுக்கும் மின் வசதி வழங்கி, கூடுதல் மின் கட்டணம் வசூலிக்க வாய்ப்பு உள்ளது.
எனவே, வீட்டின் உரிமையாளர்கள் பெயரில், ஒன்றுக்கும் மேற்பட்ட இணைப்புகள் இருந்து, வாடகைதாரர்களும் இருந்தால், 100 யூனிட் இலவச மின்சாரத்தை தொடர்ந்து வழங்க வேண்டும். மீண்டும் வாடகைக்கு வருவோர், அதை பெற வசதியாக, மின் இணைப்பை துண்டிக்கக் கூடாது.
அ.தி.மு.க., ஆட்சியில், மின் ஊழியர்கள் மின் கட்டணம் செலுத்தாதவர்கள் வீட்டிற்கு சென்று, கட்டணத்தை செலுத்தாவிட்டால் மின் இணைப்பு துண்டிக்கப்படும் எனக் கூறி, மின் கட்டணத்தை செலுத்த வைப்பர்.
தற்போது நேரில் சென்று யாரும் தெரிவிப்பதில்லை. மேலும் மின் துண்டிப்பு, இணைப்பு கட்டணத்தை பல மடங்கு உயர்த்தி விட்டனர்.
தி.மு.க., ஆட்சிக்கு வரும் போதெல்லாம், தமிழக மின் வாரியமும், எரிசக்தி துறையும், குரங்கு கையில் கிடைத்த பூ மாலையாக மாறி, சிக்கி சீரழிவது வாடிக்கையாகி விட்டது.
தி.மு.க., அரசு அனைத்து மக்களுக்கும், வாடகைதாரர்களுக்கும், 100 யூனிட் இலவச மின்சாரம் கிடைக்க செய்ய வேண்டும். மின் இணைப்பு துண்டிப்பை, ஓரிரு நாட்களுக்கு முன்னதாக தெரிவித்து, அவர்கள் மின் கட்டணத்தை செலுத்த அறிவுறுத்த வேண்டும்.
இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.

