'பாடிகார்டு' உடன் தொழுகையா? விஜய்க்கு தி.மு.க., நடிகர் கண்டனம்
'பாடிகார்டு' உடன் தொழுகையா? விஜய்க்கு தி.மு.க., நடிகர் கண்டனம்
ADDED : மார் 09, 2025 01:16 AM

சென்னை: 'ரமலான் நோன்பை வெள்ளிக்கிழமை படம் போல் அவசரமாக செய்துள்ளார், த.வெ.க., தலைவர் விஜய்' என, தி.மு.க., சிறுபான்மை பிரிவைச் சேர்ந்தவரும், நடிகருமான ஜெ.எம்.பஷீர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:
இஸ்லாமியர்களின் புனித நோன்பு நிகழ்ச்சியை, தன் அரசியல் சுயநலத்திற்காக, வெள்ளிக்கிழமை 'ரிலீஸ்' படம் போல் அவசரமாக, த.வெ.க., தலைவர் விஜய் செய்துள்ளார்.
கை, கால்களை சுத்தம் செய்து விட்டுதான் தொழுகையில் ஈடுபடுவது மரபு. அவ்வேளையில், ஏழை, பணக்காரன் உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்ற வேறுபாடு இல்லாமல், சமமாக தோளோடு தோள் நின்று தொழுவதே வழக்கம்.
ஆனால், விஜய் தொழும்போது கூட, பவுன்சர்கள் என அழைக்கப்படும் 'பாடிகார்டு'களை உடன் வைத்துள்ளார். அப்படி தொழுகை நடத்திய முதல் அரசியல் தலைவராகியுள்ளார். ஒரு நாட்டின் அதிபர் கூட, இவ்வாறு பாதுகாவலர்களை பின்னால் நிற்க வைத்துவிட்டு தொழுததாக வரலாறு இல்லை.
நோன்புக்காக வந்தவர்களை வெளியே நிற்க வைத்து, சட்டைகளை கிழித்தும், அடித்தும் துரத்தியுள்ளனர். கிடைக்கும் சந்தர்ப்பத்தில் எல்லாம் அரசியல் செய்ய எண்ண வேண்டாம். நோன்பு வைத்தவர்களை மட்டும் தானே அழைத்தீர்கள்; அழைப்பிதழ் இல்லாதவர்களை எப்படி நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடந்த அரங்கத்துக்குள் அனுமதித்தீர்கள்?
நோன்பு திறக்கும் நிகழ்ச்சிக்கு கேரவனில் வந்த முதல் நபரும் விஜயாகத்தான் இருப்பார். எல்லாமே சினிமா பாணியில் இருக்கிறதே!
விஜய் இதற்கு வருத்தம் தெரிவிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.