அங்கீகாரம் இல்லா வாகன நிறுத்தும் இடங்கள் மீது நடவடிக்கைக்கு தயார்
அங்கீகாரம் இல்லா வாகன நிறுத்தும் இடங்கள் மீது நடவடிக்கைக்கு தயார்
ADDED : மார் 22, 2024 01:18 AM
புதுடில்லி:நகரின் 12 மண்டலங்களிலும் அங்கீகாரம் இல்லாமல் செயல்பட்டு வரும் வாகன நிறுத்தும் இடங்கள் மீது நடவடிக்கை எடுக்க, மாநகராட்சி தயாராகி வருகிறது.
நகரில் அங்கீகாரம் பெற்று இயங்கும் 403 வாகன நிறுத்தும் இடங்கள் குறித்த பட்டியலை வெளியிட்டு, மேயர் ஷெல்லி ஓபராய் கூறியதாவது:
நகரம் முழுவதும் வாகன நிறுத்துவது பெரும் பிரச்னையாக உருவெடுத்துள்ளது. பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் பிரச்னைக்கு சட்டவிரோதமாக வாகனங்களை நிறுத்துவதும் ஒரு காரணம்.
நகரில் அங்கீகாரம் பெறாத வாகன நிறுத்தும் இடங்களால் மாநகராட்சிக்கு வரி இழப்பு ஏற்படுகிறது. இத்தகைய வாகன நிறுத்தும் இடங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
அங்கீகாரம் பெற்ற 403 வாகன நிறுத்தும் இடங்களைத் தவிர, பிற அனைத்தும் அங்கீகாரம் பெறாதவையாகவே கருதப்படும். அங்கீகாரம் பெறாத வாகன நிறுத்தும் இடம் குறித்து illegalparkingcomplaintcell@gmail.com என்ற மின்னஞ்சலில் புகார் செய்யலாம்.
இவ்வாறு மேயர் கூறியுள்ளார்.
இதற்கிடையில் நகர மக்களின் வசதிக்காக, மாநகராட்சி சார்பில் தற்காலிக வாகன நிறுத்தும் இடங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நகரில் அமைக்கப்பட்டுள்ள இலவச வாகன நிறுத்தும் இடங்கள் குறித்த விபரங்களை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.

