டெங்கு பரவாமல் தடுங்கள்! டாக்டர்களுக்கு அரசு உத்தரவு
டெங்கு பரவாமல் தடுங்கள்! டாக்டர்களுக்கு அரசு உத்தரவு
ADDED : ஜூலை 15, 2024 02:50 AM
சென்னை: கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஈரோடு, சேலம் மற்றும் நீலகிரி மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு, பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வவிநாயகம் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:
கர்நாடகா மாநிலத்தில், டெங்கு காய்ச்சல் பாதிப்புகள் பதிவாகி உள்ளன. எனவே, தமிழகத்தின் எல்லையோர மாவட்டங்களில், டெங்கு காய்ச்சல் கட்டுப் பாடு மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்தி கண் காணிக்க வேண்டும்.
ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு, தனியார் கிளினிக்குகளில் பதிவாகும் காய்ச்சல், டெங்கு அறிகுறிகள் பற்றிய விபரங்களை சேகரிக்க வேண்டும். ஆபத்தான பகுதிகளில் கள ஆய்வாளர்களை நியமித்து, பொதுமக்கள், மாணவர்களுக்கு சுற்றுப்புற துாய்மை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
காலி மனைகளில் தேங்கியுள்ள குப்பையை அகற்ற, உள்ளாட்சி அமைப்புகளுக்கு அறிவுறுத்த வேண்டும்; கொசு பெருக்கத்தை கட்டுப்படுத்த வேண்டும்.
கொசுக்கள் அதிகமாக பெருகும் இடங்களை கண்டறிந்து, குளோரின் தெளித்து சுத்தப்படுத்த வேண்டும். அரசு, தனியார் வளாகங்களை, ஏடிஸ் கொசு இல்லாத வளாகங்களாக பராமரிக்க விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
மருத்துவமனைகளில் உள்ள காய்ச்சல் வார்டுகளில், கூடுதலாக படுக்கை, நோயறியும் கருவிகள், அத்தியாவசிய மருந்துகள், பிளாஸ்மாவை பிரிக்கும் கருவிகள், அவசர சிகிச்சை பிரிவுகளை தயார் நிலையில் வைத்துஇருக்க வேண்டும்.
புதிதாக பாதிக்கப்படுவோரின் விபரங்களை, மாநில சுகாதார அதிகாரிகளுக்கு உடனடியாக தெரிவிக்க வேண்டும். பூச்சியியல் நிபுணர்களுடன் ஒருங்கிணைந்து, கொசு ஒழிப்பு, காய்ச்சல் தடுப்பு மற்றும் சிகிச்சைகளுக்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு சுற்றறிக்கை யில் கூறப்பட்டுள்ளது.

