தானாகவே வருமான வரி பிடித்தம் செய்யும் நடைமுறையை கைவிட வேண்டும் ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தல்
தானாகவே வருமான வரி பிடித்தம் செய்யும் நடைமுறையை கைவிட வேண்டும் ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தல்
ADDED : ஏப் 27, 2024 01:55 AM

விருதுநகர்:ஐ.எப்.எச்.ஆர்.எம்.எஸ்.,ல் தானாகவே வருமான வரி பிடித்தம் செய்யும் நடைமுறையை கைவிட வேண்டும், என தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில பொதுச்செயலாளர் ச.மயில் வலியுறுத்தி உள்ளார்.
அவர் கூறியதாவது: தமிழகத்தில் பணியாற்றும் ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு தற்போது ஒருங்கிணைந்த நிதி, மனிதவள மேலாண்மை மென்பொருள் அதாவது ஐ.எப்.எச்.ஆர்.எம்.எஸ்., மூலம் அவர்களது சம்பளம் வழங்கும் அலுவலர்களால் ஊதிய பட்டியல்கள் சமர்ப்பிக்கப்பட்டு வங்கி கணக்கில் நேரடியாக மாத ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது.
2023-24ம் நிதியாண்டு வரை அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மாதந்தோறும் பெறும் ஊதியத்தில் குறிப்பிட்ட தொகையை வருமான வரியாக மாத ஊதியத்திலேயே ஐ.எப்.எச்.ஆர்.எம்.எஸ்., வழியாகவே பிடித்தம் செய்யப்பட்டது.
ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதம் வருமான வரி கணக்கிடும் போது துல்லியமாக வருமானத்தை கணக்கிட்டு அதற்குரிய வருமான வரியையும் கணக்கிட்டு ஏற்கனவே மாதந்தோறும் ஊதியத்தில் வருமான வரியாக செலுத்திய தொகை போக மீதி செலுத்த வேண்டிய தொகையை பிப்ரவரி ஊதியத்தில் பிடித்தம் செய்து வந்தனர்.
இந்த நடைமுறையில் எவ்வித சிக்கலும் ஏற்படவில்லை. மிகச்சரியாக தங்கள் வருமான வரியை செலுத்தி வந்தனர்.
ஆனால் இந்த நிதியாண்டின் 2024-25 ஏப்ரல் மாதம் முதல் தானியங்கி நடைமுறையில் ஐ.எப்.எச்.ஆர்.எம்.எஸ்.,ல் பிடித்தம் செய்யப்படுகிறது.செலுத்த வேண்டிய வருமான வரியை ஆண்டு வருமானத்தின் அடிப்படையில் வருமான வரியை கணக்கிட்டு, அத்தொகையை 11 ஆல் வகுத்து ஊதியத்தில் ஐ.எப்.எச்.ஆர்.எம்.எஸ்., மூலம் தானாகவே பிடித்தம் செய்யும் நடைமுறையை தமிழக அரசின் நிதித்துறை நடைமுறைப்படுத்தி உள்ளது. இந்த நடைமுறையில் ஏற்பட்டுள்ள குளறுபடிகள், தவறான வருமான வரி கணக்கீடுகளால் தமிழகம் முழுவதும் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியும், அதிருப்தியும் ஏற்பட்டுள்ளது.
ஏற்கனவே ஐ.எப்.எச்.ஆர்.எம்.எஸ்., மென்பொருள் மாதந்தோறும் தங்கள் ஊதியத்தில் இருந்து வருமான வரியை மிகச்சரியாக ஆசிரியர்களும், அரசு ஊழியர்களும் செலுத்தி வந்த நிலையில் அதில் எவ்வித பிரச்னையும் ஏற்படாத சூழலில் அது தொடர்வது தான் சரியாக இருக்கும். ஆசிரியர்கள், அரசு ஊழியர்களை பாதிக்க கூடிய குழப்பமான தானாகவே பிடித்தம் செய்யும் புதிய நடைமுறையை கைவிட வேண்டும் என்றார்.

