ADDED : ஏப் 15, 2024 04:17 AM

சென்னை: பிரதமர் நரேந்திர மோடி, தென் மாவட்டங்களில் போட்டியிடும் பா.ஜ., வேட்பாளர்களை ஆதரித்து, திருநெல்வேலியில் நடக்கும் பொதுக் கூட்டத்தில் இன்று பிரசாரம் செய்கிறார்.
பிரதமர் மோடி இம்மாதம் 9ம் தேதி மாலை சென்னை வந்தார். அப்போது, தென் சென்னை, மத்திய சென்னை, வடசென்னையில் போட்டியிடும் பா.ஜ., வேட்பாளர்களை ஆதரித்து, தி.நகர் பாண்டிபஜாரில், 'ரோடு ஷோ' நிகழ்ச்சி வாயிலாக பிரசாரம் செய்தார்.
அடுத்த நாள் காலை, வேலுாரில் நடந்த பொதுக் கூட்டத்தில் பங்கேற்றார். மதியம், கோவை, மேட்டுப்பாளையத்தில் நடந்த பொதுக் கூட்டங்களில், நீலகிரி வேட்பாளர் மத்திய அமைச்சர் முருகன், கோவை வேட்பாளர் அண்ணாமலை உள்ளிட்ட பா.ஜ., மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரம் செய்தார்.
இன்று பிரதமர் மோடி பிரசாரத்திற்காக தமிழகம் வருகிறார். அவர், திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரத்தில் நடக்கும் பொதுக் கூட்டத்தில், திருநெல்வேலி வேட்பாளர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட பா.ஜ., மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களுக்காக பிரசாரம் செய்கிறார்.
ராணுவ துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், கிருஷ்ணகிரியில் போட்டியிடும் பா.ஜ., வேட்பாளர் நரசிம்மனை ஆதரித்து, நாளை பிரசாரம் செய்கிறார்.
பின், மதியம் சென்னை வரும் அவர், கிண்டியில் நட்சத்திர ஹோட்டலில் முக்கிய பிரமுகர்களை சந்தித்து, பா.ஜ.,வுக்கு ஆதரவு கோருகிறார்.
மாலை திருவண்ணாமலை செல்லும் ராஜ்நாத் சிங், அத்தொகுதி பா.ஜ., வேட்பாளர் அஸ்வத்தாமனுக்கு பிரசாரம் செய்கிறார். இரவு தாம்பரத்தில் நடக்கும் பொதுக் கூட்டத்தில் பங்கேற்கும் அவர், ஸ்ரீபெரும்புதுார் த.மா.கா., வேட்பாளர் வேணுகோபாலுக்கு ஆதரவாக பிரசாரம் செய்கிறார்.

