ADDED : மே 10, 2024 05:26 AM

சென்னை : தமிழகத்தில் சென்னை, மதுரை, நாகர்கோவில், உதகையை தவிர மற்ற இடங்களில் மொத்தம், 6,000க்கும் மேற்பட்ட தனியார் பஸ்களும், 2,800க்கும் மேற்பட்ட மினி பஸ்களும் இயக்கப்பட்டு வருகின்றன.
அரசு போக்குவரத்து கழகங்களில் ஏற்படும் நிதி சுமையை தீர்க்க, அரசு சார்பில் நிதி உதவி அளிக்கப்பட்டு வருகிறது. இருப்பினும், தனியார் பஸ், மினி பஸ்களில் பல ஆண்டுகளாக கட்டணம் மாற்றி அமைக்கப்படவில்லை.
இதேபோல, மினி பஸ்களுக்கு தற்போதுள்ள எல்லையை மாற்றியமைக்க வேண்டுமென, மினி பஸ் உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
அதனால், தனியார் மற்றும் ஆம்னி பஸ் உரிமையாளர்களின் கோரிக்கைகள் குறித்து, தலைமை செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நேற்று ஆலோசனை நடந்தது.
இதில், போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர். தேர்தல் முடிவுக்கு பின், முக்கிய முடிவுகள் வெளியிடப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது குறித்து, தனியார் பஸ் உரிமையாளர்கள் கூறுகையில், 'அரசின் சாதாரண கட்டண பஸ்களில், பெண்களுக்கு இலவச பயண சலுகை அறிவிக்கப்பட்டு உள்ளதால், தனியார் பஸ்களில் கூட்டம் குறைந்து உள்ளது.
'பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால், எங்களால் இழப்பை சரி செய்ய முடியாமல் கஷ்டப்படுகிறோம். பொதுப் போக்குவரத்து வசதியை பாதுகாக்க, தமிழக அரசு எங்களுக்கு உதவிட வேண்டும்' என்றனர்.