அரசு பஸ்சில் பயணி டிக்கெட் தொலைத்ததால் பிரச்னை; ஒரு மணி நேரம் தாமதம்
அரசு பஸ்சில் பயணி டிக்கெட் தொலைத்ததால் பிரச்னை; ஒரு மணி நேரம் தாமதம்
ADDED : மே 13, 2024 07:36 AM
திருவாடானை: அரசு போக்குவரத்து பஸ்சில் டிக்கெட்டை தொலைத்ததால் வாக்குவாதம் செய்த பயணியால் ஒரு மணி நேரம் தாமதம் ஏற்பட்டு மற்ற பயணிகள் அவதியடைந்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியை சேர்ந்தவர் ஜோஸ்லின் 40. இவர் நேற்று காலை மதுரை-தொண்டி செல்லும் அரசு பஸ்சில் கருப்பாயி ஊரணியிலிருந்து தொண்டிக்கு ரூ.90 கொடுத்து டிக்கெட் எடுத்தார். திருவேகம்பத்துாரில் டிக்கெட் பரிசோதகர்கள் ஏறி பயணிகளிடம் சோதனை செய்தனர்.
அப்போது ஜோஸ்லினிடம் டிக்கெட் இல்லை. தொலைந்துவிட்டதாக அவர் கூறவே ரூ.500 அபராதம் செலுத்த வேண்டும் என்று டிக்கெட் பரிசோதகர்கள் கூறினர்.
10 ரூபாயை தவிர என்னிடம் பணம் இல்லை என்று ஜோஸ்லின் கூறியதால் வாக்குவாதம் ஏற்பட்டது.
திருவாடானை போலீஸ் ஸ்டேஷனுக்கு பஸ் சென்றது. அங்கு போலீசார் கண்டக்டரின் இன்வாய்ஸ் கணக்கு சரியாக உள்ளதா என செக் செய்யப்பட்டதில் அனைத்து பயணிகள் எடுத்த டிக்கெட்டுகளும் சரியாக இருந்தன.
டிக்கெட் இல்லாமல் பயணம் செய்யக்கூடாது என்பதால் வேறு வழியின்றி ரூ.90க்கான டிக்கெட் மீண்டும் ஜோஸ்லினிடம் கொடுக்கப்பட்டது.
அதன்பின் தொண்டி சென்ற ஜோஸ்லின் அந்த பணத்தை கணவரிடமிருந்து வாங்கி கண்டக்டரிடம் கொடுத்தார். இச்சம்பவத்தால் பஸ் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக தொண்டிக்கு தாமதமாக சென்றது. இதனால் மற்ற பயணிகள் அவதியடைந்தனர்.