ADDED : ஆக 22, 2024 01:54 AM
சென்னை:காலி பணியிடங்களை நிரப்ப எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து, இரண்டு வாரத்துக்குள் அறிக்கை தாக்கல் செய்யும்படி, மின்வாரியத்துக்கு, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழக மின்வாரியத்தில், காலி பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தி, தமிழ்நாடு மின்வாரிய, 'கேங்மேன்' தொழிற்சங்கம் சார்பில், இன்று வேலை நிறுத்த போராட்ட அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தும், இந்த சட்ட விரோதமாக போராட்டத்துக்கு தடைகோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில், திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியை சேர்ந்த புருஷோத்தமன் என்பவர் பொது நல மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு, பொறுப்பு தலைமை நீதிபதி டி.கிருஷ்ணகுமார், நீதிபதி பி.பி.பாலாஜி அடங்கிய, 'முதல் பெஞ்ச்' முன் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, மின்வாரிய கேங்மேன் தொழிற்சங்கம் சார்பில், வழக்கறிஞர் எம்.வேல்முருகன் ஆஜராகி, ''இன்று அறிவித்த போராட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மின்வாரியத்தில் பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன.
''இதனால், கேங்மேன்களை மின் இணைப்பு பணிகளுக்கு பயன்படுத்துகின்றனர். தகுதி இல்லாத இந்த பணிகளில், தங்களை ஈடுபடுத்துவதால், மூன்று ஆண்டுகளில் மின் விபத்து ஏற்பட்டு, 70 பேர் வரை இறந்துள்ளனர்,'' என்றார்.
இதையடுத்து, மின்வாரியத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து, இரண்டு வாரத்துக்குள் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்ட முதல் பெஞ்ச், விசாரணையை தள்ளிவைத்தது.
இதேபோல, போராட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தாக்கல் செய்த வழக்கை விசாரித்த நீதிபதி என்.செந்தில்குமார், அதிகாரிகள் முன் சமரச பேச்சு நிலுவையில் இருக்கும் நிலையில், தமிழ்நாடு மின்வாரிய கேங்மேன் தொழிற்சங்கம் போராட்டத்தில் ஈடுபட தடை விதித்து உத்தரவிட்டார்.