5 மாவட்ட நீர்வழித்தடம் துார்வாரும் பணி முன்கூட்டியே துவங்க நீர்வள துறைக்கு தடை
5 மாவட்ட நீர்வழித்தடம் துார்வாரும் பணி முன்கூட்டியே துவங்க நீர்வள துறைக்கு தடை
ADDED : ஏப் 11, 2024 08:50 PM
சென்னை:சென்னை உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களில், துார்வாரும் பணிகளை முன்கூட்டியே துவங்க நீர்வளத் துறைக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலுார் மாவட்டங்கள் வடகிழக்கு பருவமழையால் ஒவ்வொரு ஆண்டும் கடுமையாக பாதிக்கப்படுகின்றன.
பருவமழைக்கு முன், இம்மாவட்டங்களில் உள்ள அடையாறு, கூவம், பகிங்ஹாம் கால்வாய், கொசஸ்தலையாறு, ஆரணியாறு, புழல் ஏரி உபரிநீர் கால்வாய் உள்ளிட்ட நீர்வழித்தடங்கள் துார்வாரப்படுகின்றன.
இப்பணிகளுக்கு 20 கோடி ரூபாய் வரை செலவிடப்படுகிறது. ஆனாலும், பருவமழை பாதிப்பு தொடர்கிறது. கடந்தாண்டு, 'மிக்ஜாம்' புயலால் கொட்டிய மழைநீர் வடிந்து இயல்பு நிலை திரும்புவதற்கு பல நாட்களானது. துார்வாரும் பணிக்கு போதிய நிதி ஒதுக்கப்படாதது தான், வெள்ள நீர் விரைந்து வெளியேறாததற்கு காரணம் என, நீர்வளத்துறை தரப்பில் கூறப்பட்டது.
எனவே, துார்வாரும் பணிக்கான நிதி ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
இதை பரிசீலித்த நிதித்துறை, நடப்பாண்டு துார்வாரும் பணிக்கு, 35 கோடி ரூபாய் வழங்கியுள்ளது. நிதி ஒதுக்கீட்டை உறுதி செய்து, பிப்., 6ம் தேதி அரசு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த நிதியில் நீர்வழித்தடங்களில், 167 இடங்களில் பணிகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டு உள்ளது.
இதற்கான ஒப்பந்ததாரர் தேர்வையும் நீர்வளத்துறையினர் ரகசியமாக முடித்துள்ளனர். வழக்கமாக ஆக., மாதம் பணிகளை துவங்கி, டிசம்பரில் வடகிழக்கு பருவமழை முடியும் வரை அடைப்புகளை நீக்குவது வழக்கம்.
ஆனால், நடப்பாண்டு இம்மாவட்டங்களில் முக்கிய பொறுப்புகளில் உள்ள அதிகாரிகள் விரைவில் பணி ஓய்வு பெறுகின்றனர்.
எனவே, பணிகளை முன்கூட்டியே துவங்க, அவசரம் காட்டி வருகின்றனர். ஆனால், பணிகளை ஆகஸ்ட் மாதத்திற்கு பின் தான் துவங்க வேண்டும் என, நீர்வளத்துறை செயலர் சந்தீப் சக்சேனா உத்தரவிட்டுள்ளார்.

