சுத்த சன்மார்க்க நிலைய நிலம் கைப்பற்றும் நடவடிக்கைக்கு தடை
சுத்த சன்மார்க்க நிலைய நிலம் கைப்பற்றும் நடவடிக்கைக்கு தடை
ADDED : மே 16, 2024 01:32 AM
சென்னை:வடலுார் சுத்த சன்மார்க்க நிலையம் வசம் உள்ள நிலம் தொடர்பாக, சேப்ளாநத்தம் கிராம பஞ்சாயத்து தலைவர் நடவடிக்கை எடுக்க, சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
கடலுார் மாவட்டம், வடலுாரில் உள்ள சுத்த சன்மார்க்க நிலைய செயலர் ஆர்.செல்வராஜ் தாக்கல் செய்த மனு:
கடந்த 73 ஆண்டுகளுக்கு முன், ராமலிங்க அடிகளின் கொள்கையை பரப்புவதற்காக சுத்த சன்மார்க்க நிலையம் துவக்கப்பட்டது. எங்கள் அறக்கட்டளை சார்பில் ஆதரவற்றோர் இல்லங்கள், ஏழை எளியவர்களுக்கு இலவச பள்ளி உள்ளிட்டவற்றை நடத்துகிறோம்.
குருகுலம் மற்றும் சேவாஸ்ரமம் ஏற்படுத்த காலியிடம் தேவைப்பட்டது. அறங்காவலராக இருந்த, முன்னாள் முதல்வர் ஓமந்துார் ராமசாமி ரெட்டியார், அரசிடம் விண்ணப்பித்தார். நிலம் ஒதுக்க தென்னாற்காடு கலெக்டரும் பரிந்துரைத்தார்.
அதைத்தொடர்ந்து, காலியிடத்தை அரசு ஒதுக்கியது. நிபந்தனைகள் விதித்து, 1951ல் அறக்கட்டளைக்கு நிலம் மாற்றப்பட்டது.
நிபந்தனைகளை அறக்கட்டளை பின்பற்றியது. பின், கூடுதல் நிலமும் அறக்கட்டளைக்கு ஒதுக்கப்பட்டது. குறிப்பிட்ட சர்வே எண்ணில் உள்ள நிலத்தின் உரிமை மட்டும் மாற்றப்படவில்லை. விருத்தாச்சலம் தாலுகா, சேப்ளாநத்தம் கிராம பஞ்சாயத்து தலைவர், அறக்கட்டளைக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக, குறிப்பிட்ட சர்வே எண்ணில் உள்ள நிலம், அரசுக்கு சொந்தமானது என்று கூறுகிறார்.
தரிசு நிலமாக வகைப்படுத்தப்பட்டு உள்ளதால், அறக்கட்டளை வசம் உள்ள, 23 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமிப்பாக கருதி, அங்கிருந்து அகற்ற நடவடிக்கை எடுத்துள்ளார். வருவாய் ஆவணங்களில், தரிசு என்று தவறாக குறிப்பிட்டுள்ளனர். ஆவணங்களில் மாற்றம் கோரி மனு அளிக்கப்பட்டது; எந்த நடவடிக்கையும் இல்லை.
நிலத்தை எங்களிடம் இருந்து எடுப்பதற்கு, பஞ்சாயத்து தலைவர் குறியாக உள்ளார். நெய்வேலி நீதிமன்றத்தில், சிவில் வழக்கு தொடர்ந்துள்ளோம்; நிலுவையில் உள்ளது.
இந்நிலையில், அந்த நிலத்தில் உள்ள அறக்கட்டளை சொத்துக்களை அகற்றும்படி, பஞ்சாயத்து தலைவர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
எனவே, பஞ்சாயத்து தலைவரின் நடவடிக்கைக்கும், நிலத்தில் இருந்து எங்களை வெளியேற்றவும் தடை விதிக்க வேண்டும். பட்டா கோரிய விண்ணப்பத்தின் மீது முடிவெடுக்கும் வரை, மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
மனு, நீதிபதிகள் பி.டி.ஆஷா, செந்தில்குமார் அடங்கிய அமர்வில், விசாரணைக்கு வந்தது. மனுவுக்கு பதில் அளிக்க, கடலுார் கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு, விசாரணையை, ஜூன் 12க்கு நீதிபதிகள் தள்ளி வைத்தனர். கிராம பஞ்சாயத்து தலைவர் நடவடிக்கைக்கும், நீதிபதிகள் தடை விதித்தனர்.