மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த தமிழகத்தில் ரூ.999.37 கோடியில் திட்டப்பணிகள்
மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த தமிழகத்தில் ரூ.999.37 கோடியில் திட்டப்பணிகள்
ADDED : மார் 09, 2025 02:08 AM

சென்னை: 'தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த, மத்திய அரசு மற்றும் தமிழக அரசின் நிதியுதவியுடன், ஐந்து மீன்பிடி துறைமுகம் மற்றும் 32 இறங்கு தளங்கள் அமைக்கும் பணி நடக்கிறது.
விரைவில் அவை, மக்கள் பயன்பாட்டிற்கு வரும்' என, மீன்வளத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து, அவர்கள் கூறியதாவது:
5 மீன்பிடி துறைமுகம்
தமிழகத்தில், மீனவர்கள் தங்களின் படகுகளை பாதுகாப்பாக நிறுத்தவும், மீன்களை சுகாதாரமாக கையாளவும், உள்ளூர் மற்றும் ஏற்றுமதி சந்தையின் மீன் தேவைகளை பூர்த்தி செய்யவும், ஐந்து மீன்பிடி துறைமுகம் அமைக்கும் பணி, இரண்டு துறைமுகம் விரிவாக்கப் பணி மற்றும், 32 மீன்பிடி இறங்கு தளங்கள் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன.
கடந்த 2018 - 19ல், மத்திய அரசின், மீன்வளம் மற்றும் மீன்வளர்ப்பு உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதி, கிராமப்புற உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதி போன்றவற்றுடன், தமிழக மீன்வளத்துறை சார்பில், சென்னை திருவொற்றியூர்; நாகப்பட்டினம் மாவட்டம், ஆறுகாட்டுதுறை, வெள்ளப்பள்ளம், அக்கரைப்பேட்டை; விழுப்புரம் - அழகங்குப்பம்; செங்கல்பட்டு - ஆலம்பரை குப்பம், கன்னியாகுமரி - தேங்காய்பட்டினம் பகுதிகளில், 757 கோடி ரூபாய் மதிப்பில், மீன்பிடி துறைமுகங்கள் கட்டும் பணிகள் நடந்து வருகின்றன.
௩௨ மீன் இறங்குதளம்
அதேபோல, 32 இடங்களில், 242.37 கோடி ரூபாய் மதிப்பில், மீன் இறங்கு தளங்கள் கட்டப்படுகின்றன. சில இடங்களில் பணிகள் நிறைவடைந்துள்ளன. அவை, விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
சென்னை திருவொற்றியூர்: இங்கு, 200 கோடி ரூபாயில், மீன்பிடி துறைமுகம் கட்டப்படுகிறது. அதில், 200 படகுகளை நிறுத்தலாம். 2,500 பேர் நேரடியாகவும், 5,000 பேர் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு பெறுவர். தேசிய பசுமை தீர்ப்பாயம் வழக்கு தொடர்ந்ததால், பணி துவங்குவதில் தாமதம் ஏற்பட்டது. தற்போது, பணி முழுமை அடைந்துள்ளது
நாகை மாவட்டம் அக்கரைப்பேட்டை: இங்கு, 81 கோடி ரூபாயில் நடைபெறும் துறைமுக விரிவாக்க பணி, 98 சதவீதம் நிறைவடைந்துள்ளது.
ஏற்கனவே, 2.5 ஏக்கரில் துறைமுகம் உள்ள நிலையில், தற்போது மேலும், 5.5 ஏக்கரில் விரிவாக்கம் செய்யப்படுகிறது. இங்கு, 400 படகுகள், 150 விசைப்படகுகள் நிறுத்தலாம்.
இதனால், 40 சதவீதம் மீன்பிடிப்பு அதிகரிக்கும். 8,000 பேர் நேரடியாகவும், 2,000 பேர் மறைமுகமாகவும் வேலை வாய்ப்பு பெறுவர்
நாகை மாவட்டம் ஆறுகாட்டுதுறை: இப்பகுதியில், 150 கோடி ரூபாய் மதிப்பீட்டில், மீன்பிடி துறைமுகம் அமைக்கும் பணி நடந்து வருகிறது.
தற்போது, கூடுதலாக 85 கோடி ரூபாய் செலவாகும் பட்சத்தில், அரசிடம் கோரப்பட்டுள்ளது. 40 ஏக்கரில் பணி நடந்து வரும் நிலையில், 90 சதவீத பணி நிறைவடைந்துள்ளது. இதனால், 10,000 பேர் நேரடியாகவும், 5,000 பேர் மறைமுகமாகவும் வேலை வாய்ப்பு பெறுவர்.
நாகை மாவட்டம் வெள்ளப்பள்ளம்: இங்கு, 100 கோடி ரூபாயில், துறைமுகம் அமைக்கப்படுகிறது. மொத்தம், 40 ஏக்கரில், 78 சதவீத பணி நிறைவடைந்து உள்ளது. இதனால், 8,000 பேர் நேரடியாகவும், 5,000 பேர் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு பெறுவர்.
கன்னியாகுமரி மாவட்டம், தேங்காய்பட்டினம்: இங்கு, 253 கோடி ரூபாயில், மீன்பிடி துறைமுக விரிவாக்கப்பணி நடக்கிறது; 2021ல் துவங்கிய பணி, அடுத்த மாதம் நிறைவடைந்து பயன்பாட்டிற்கு வர வேண்டியது. ஆனால், 60 சதவீத பணியே நிறைவடைந்துள்ளது.
தாமிரபரணியின் இரு கரைகளிலும் அமையும் துறைமுகத்தில், 2,700 படகுகள், 719 விசைப்படகுகளை நிறுத்தலாம். இதனால், 25,000 பேர் நேரடியாகவும், 5,000 பேர் மறைமுகமாகவும் பயன் பெறுவர்.
விழுப்புரம் மாவட்டம், அழகன்குப்பம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டம், ஆலம்பரைக்குப்பம்: இங்கு, 235 கோடி ரூபாயில் மீன்பிடி துறைமுகம் அமைக்கப்படுகிறது. தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடரப்பட்டதால், பணி தாமதம். சுற்றுச்சூழல் அனுமதி பெற்றதும் பணி துவக்கப்படும்.