விண்வெளிப்பூங்கா நிலம் ஆர்ஜிதத்திற்கு எதிர்ப்பு உடன்குடியில் உண்ணாவிரதம்
விண்வெளிப்பூங்கா நிலம் ஆர்ஜிதத்திற்கு எதிர்ப்பு உடன்குடியில் உண்ணாவிரதம்
ADDED : பிப் 23, 2025 01:17 AM

தூத்துக்குடி:துாத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் குலசேகரபட்டினம் அருகே அரசின் தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை சார்பில் விண்வெளி பூங்கா அமைக்க 1000 ஏக்கர் நிலம் கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி கிராமத்தினர் உடன்குடியில் நேற்று உண்ணாவிரதம் இருந்தனர்.
குலசேகரபட்டினம் பகுதியில் 2200 ஏக்கரில் ராக்கெட் ஏவுதளம் அமைக்கும் பணி நடக்கிறது. அதே பகுதியில் கூடுதலாக 1000 ஏக்கர் நிலம் ஆர்ஜிதம் செய்து அரசின் தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை சார்பில் விண்வெளிப்பூங்கா அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்கு அப்பகுதியிலுள்ள 15 கிராமத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஜனவரி 23 தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் நடந்த விவசாயிகள் குறை தீர் கூட்டத்தில் எதிர்ப்பு தெரிவித்தனர்.
பின் குலசேகர பட்டினம் அருகே ஆதியாக்குறிச்சி, வெங்கட்ராமானுஜபுரம், மாதவன்குறிச்சி மக்கள் 200க்கும் மேற்பட்டோர் உடன்குடியில் தடையை மீறி உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு கைதாகினர்.
நேற்று மூன்றாம் கட்டமாக உடன்குடியில் ஆதியாக்குறிச்சி, குலசேகரபட்டினம், கொட்டாங்காடு, உதிரமாடன் குடியிருப்பு, வேதக்கோட்டவிளை, தீதத்தாபுரம், ஞானியார்குடியிருப்பு உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட கிராமத்தினர் உடன்குடி பஜாரில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர்.

