ADDED : ஏப் 29, 2024 06:10 AM
சென்னை : 'தமிழகம் முழுதும், கனிமவள கொள்ளையை தடுத்து நிறுத்த, அரசு நடவடிக்கை எடுக்க தவறினால், பா.ம.க., போராட்டம் நடத்தும்' என, அக்கட்சியின் தலைவர் அன்புமணி எச்சரித்துள்ளார்.
அவரது அறிக்கை: தமிழகம் முழுதும், கடந்த 19-ம்தேதி லோக்சபா தேர்தல் நடந்த போது, கூடலுார் பகுதியிலிருந்து ஏராளமான லாரிகள் வாயிலாக, கேரளாவுக்கு கனிம வளங்கள் கொள்ளையடித்து செல்லப்பட்டன.
மேற்குத் தொடர்ச்சி மலையின் அங்கமான கூடலுார் நகராட்சி, மலைதள பாதுகாப்பு, யானை வழித்தடம் உடைய பகுதி.
அங்கு கனிமவள கொள்ளை நடப்பது தொடர்பான வழக்குகளை விசாரித்த, சென்னை உயர் நீதிமன்றம், அப்பகுதியில் கனிமவளங்களை தோண்டி எடுக்கவும், கடத்திச் செல்லவும் தடை விதித்தது.
அவற்றை பற்றியெல்லாம் கவலைப்படாமல், அதிகாரிகளின் துணையுடன் கனிம கொள்ளை தொடர்கிறது.
பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, மதுக்கரை, உடுமலை, மடத்துக்குளம் பகுதிகளில், சட்டவிரோத குவாரிகள் செயல்பட்டு வருகின்றன. இங்கிருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும், கேரளாவுக்கும் தினமும் ஆயிரக்கணக்கான லாரிகளில், கல், மண், மணல், கிராவல் என, அனைத்து கனிம வளங்களும் கடத்தப்படுகின்றன.
கனிமவள கொள்ளையை கண்டு கொள்ளாமல் இருப்பதற்காக மட்டும், கொங்கு மண்டலத்தில் பல்வேறு துறை அதிகாரிகளுக்கும், அவர்களுக்கு மேல் அதிகார பதவிகளில் இருப்பவர்களுக்கும், ஆண்டுக்கு 1,000 கோடி ரூபாய் வரை கையூட்டு வழங்கப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன.
தமிழகம் முழுதும் கனிமவள கொள்ளையை தடுத்து நிறுத்த, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறினால், பா.ம.க.,போராட்டம் நடத்தும்.
இவ்வாறு அன்புமணி கூறியுள்ளார்.

