ஏழை குடும்பங்களுக்கு மாதம் ரூ.3,000 வழங்குங்கள்!: மத்திய அரசுக்கு இ.பி.எஸ்., வலியுறுத்தல்
ஏழை குடும்பங்களுக்கு மாதம் ரூ.3,000 வழங்குங்கள்!: மத்திய அரசுக்கு இ.பி.எஸ்., வலியுறுத்தல்
ADDED : ஏப் 15, 2024 12:52 AM

பெரம்பலுார்: ''அம்பானி, அதானி போன்றவர்களுக்கு வரி சலுகைகளை வாரி வழங்கும் மத்திய அரசு, அனைத்து ஏழை குடும்பங்களுக்கும் மாதம் 3,000 ரூபாய் வழங்க வேண்டும்,'' என, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி வலியுறுத்தினார்.
பெரம்பலுார் லோக்சபா தொகுதி அ.தி.மு.க., வேட்பாளர் சந்திரமோகனை ஆதரித்து, பெரம்பலுாரில் நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பழனிசாமி பேசியதாவது:
மூன்று ஆண்டுகளாக தி.மு.க., ஆட்சியில் எந்த திட்டமும் நிறைவேற்றப்படவில்லை. அ.தி.மு.க., ஆட்சியில் செயல்படுத்திய தாலிக்கு தங்கம், அம்மா ஸ்கூட்டர் போன்ற திட்டங்கள் நிறுத்தப்பட்டுள்ளன.
மினி கிளினிக்
எங்கள் ஆட்சியில் இந்த திட்டத்தின் கீழ் 3 லட்சம் பேர் பயனடைந்தனர். அம்மா மினி கிளினிக் திட்டம் ஏழை மக்களுக்காக கொண்டு வரப்பட்டது. இந்த மினி கிளினிக்கில் மருத்துவர், செவிலியர், உதவியாளர் இருந்தனர்.
விடியா தி.மு.க., அரசு காழ்ப்புணர்ச்சியால் ஏழை மக்களுக்கு சிகிச்சை அளிப்பதை கூட பொறுத்துக் கொள்ள முடியாமல், திட்டத்தை நிறுத்திவிட்டனர்.
அ.தி.மு.க., ஆட்சியில் ஏழை மக்கள் வீடு கட்ட அம்மா சிமென்ட் திட்டம் கொண்டு வரப்பட்டது. அதையும் ஸ்டாலின் நிறுத்திவிட்டார். எண்ணெய், சர்க்கரை, அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்ந்து விட்டது.
விடியா ஆட்சி பொறுப்பேற்றதிலிருந்து பொதுமக்கள் வேதனை அடைந்து வருகின்றனர். தி.மு.க., ஆட்சி அமைத்ததிலிருந்து கொள்ளை, வழிப்பறி, திருட்டு என சட்டம் ஒழுங்கு சிரிப்பாக சிரிக்கிறது.
போதைப் பொருட்களின் புழக்கம் அதிகமாக உள்ளது. பெண்கள் தனியாக நடந்து செல்ல முடியவில்லை. பொதுமக்களுக்கு பாதுகாப்பு இல்லை. காவல் துறையினருக்கே பாதுகாப்பு இல்லை.
வரி சலுகை
தி.மு.க., சார்பில் கனிமொழி நடத்திய பொதுக்கூட்டத்தில் பெண் போலீசுக்கே கூட பாதுகாப்பு இல்லை. பாதிக்கப்பட்ட பெண் போலீசார் கொடுத்த புகாரை, இரண்டு தினங்கள் வழக்கு பதிவு செய்யாமல் வைத்திருந்தனர்.
போலீசுக்கே பாதுகாப்பு இல்லை என்றால், நம் வீட்டில் உள்ள பெண்களுக்கு பாதுகாப்பு கிடைக்காது. சட்டசபை தேர்தலின் போது, தி.மு.க., கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை.
குடும்ப தலைவிக்கு 1,000 ரூபாய் கொடுக்கும் திட்டத்தை கூட, நாங்கள் போராடிய பிறகு தான் கொடுத்தனர். அதுவும், 27 மாதங்கள் கழித்து தான் வழங்கப்பட்டது.
அ.தி.மு.க., வெற்றி பெற்றால், பாரபட்சமின்றி அனைத்து பெண்களுக்கும் 1,000 ரூபாய் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். கர்நாடக மாநிலத்தில் இரண்டே மாதத்தில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
அம்பானி, அதானி போன்ற தனியார் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வரி சலுகைகளை வாரி வழங்கும் மத்திய அரசு, ஏழை, எளிய குடும்பங்களுக்கு மாதம், 3,000 ரூபாய் வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
தொடர்ந்து, கள்ளக்குறிச்சி வேட்பாளர் குமரகுருவை ஆதரித்து ஆத்தாரில் நடந்த கூட்டத்தில் பழனிசாமி பேசினார்.

