மதுரை, திண்டுக்கல் மாவட்ட பாசனத்திற்கு வைகை அணையில் தண்ணீர் திறக்க ஏற்பாடு
மதுரை, திண்டுக்கல் மாவட்ட பாசனத்திற்கு வைகை அணையில் தண்ணீர் திறக்க ஏற்பாடு
ADDED : ஜூலை 02, 2024 05:26 AM

ஆண்டிபட்டி : வைகை அணையில் இருந்து மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களின் முதல் போக பாசனத்திற்கு தண்ணீர் திறக்க ஏற்பாடுகள் நடந்து வருகிறது.
வைகை அணையின் நீர் இருப்பை பொறுத்து ஒவ்வொரு ஆண்டும் ஜூன், ஜூலையில் மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களில் முதல் போகத்திற்கு தண்ணீர் திறந்து விடப்படும். வைகை அணை நீர்மட்டம் 56.66 அடி இருந்த நிலையில் மே 10 முதல் 28 வரை ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை மாவட்டங்களில் பாசனத்திற்கு 1500 மில்லியன் கனடி நீர் திறந்து விடப்பட்டது.
நீர்மட்டம் 47.57 அடியாக குறைந்தது. பெரியாறு அணையில் திறந்து விடப்பட்ட நீரால் வைகை அணை நீர்மட்டம் மீண்டும் படிப்படியாக உயர்ந்து நேற்று 50.79 அடியாக இருந்தது. அணை உயரம் 71 அடி. இந்நிலையில் மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களில் முதல் போக பாசனத்திற்கு வைகை அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வைகை அணை நீர்வளத் துறையினர் கூறியதாவது: வைகை அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடுவதற்கான அரசு உத்தரவு கிடைத்ததும் நாளை அல்லது நாளை மறுநாள் தண்ணீர் திறந்து விடப்படும் என்றனர்.