ADDED : மார் 03, 2025 07:07 AM

சென்னை : 'ஹிந்தி திணிப்பு, நிதி பகிர்வில் பாரபட்சம், தொகுதி மறுசீரமைப்பில் அநீதி, ஆகியவை தொடர்பாக, மத்திய அரசை கண்டித்து, அனைத்து சட்டசபை தொகுதிகளிலும் பொதுக்கூட்டம் நடத்தப்படும்' என, துணை முதல்வர் உதயநிதி தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:
புதிய கல்விக் கொள்கை வாயிலாக ஹிந்தி திணிக்கப்படுகிறது. மத்திய பட்ஜெட்டில், தமிழகம் என்ற பெயரை முற்றிலுமாக புறக்கணித்து, நிதி பகிர்வில் மத்திய அரசு, தமிழகத்துக்கு பாரபட்சம் காட்டுகிறது. தொகுதி மறுசீரமைப்பில், தமிழகத்தை வஞ்சித்து, அநீதி இழைக்கப்படுகிறது. எனவே, மத்திய அரசை கண்டித்து, சட்டசபை தொகுதிதோறும், இன்று முதல் 10ம் தேதி வரை, இளைஞர் அணி சார்பில், கண்டனப் பொதுக்கூட்டம் நடத்தப்படுகிறது.
கூட்டத்தில் முதன்மை பேச்சாளர், இளம் பேச்சாளர் என, தொகுதிக்கு இருவர் பேச உள்ளனர். மாநில உரிமைகளுக்கு எதிராக செயல்படும், மத்திய அரசை கண்டித்தும், தி.மு.க., ஆட்சியின் சாதனைகள் குறித்தும், பேச்சாளர்கள் விளக்கிப் பேசுவர்.
மக்களுக்கு விழிப்புணர்வூட்டும் வகையில், அன்பகத்தில் தயாரிக்கப்பட்டுள்ள துண்டறிக்கையை, வீடு, வீடாக சென்று வினியோகித்து, பொதுமக்களை கூட்டத்தில் பங்கேற்க வைக்க வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.