ADDED : ஆக 24, 2024 08:58 PM
சென்னை:முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான, 'நீட்' தேர்வு நடந்து முடிந்த இரண்டு வாரத்தில், முடிவுகள் நேற்று முன்தினம் வெளியிடப்பட்டு உள்ளன.
நாடு முழுதும் அரசு, சுயநிதி கல்லுாரிகள், நிகர்நிலை பல்கலைகள் மற்றும் மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில், மருத்துவ பட்டமேற்படிப்புகளான எம்.டி., - எம்.எஸ்., மற்றும் முதுநிலை டிப்ளமா படிப்புகளுக்கான இடங்கள், நீட் தேர்வில் தகுதி பெறுபவர்களால் நிரப்பப்பட்டு வருகின்றன.
இந்த நீட் தேர்வை, தேசிய மருத்துவ அறிவியல் தேர்வுகள் வாரியம் நடத்துகிறது. 2024 - 25ம் கல்வியாண்டு மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வை, தமிழகத்தில் 25,000க்கும் மேற்பட்டோர் உட்பட, நாடு முழுதும் 2.3 லட்சம் பேர் எழுதினர்.
முறைகேடுகளை தடுக்க, கடந்த 11ம் தேதி இரண்டு பிரிவுகளாக தேர்வு நடத்தப்பட்டது.
இந்நிலையில், முதுநிலை மருத்துவ படிப்பிற் கான நீட் தேர்வு முடிவுகள், நேற்று முன்தினம் இரவு, www.natboard.edu.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுஉள்ளன.
கடந்தாண்டில், 17 நாட்களில் வெளியிடப்பட்ட நிலையில், இந்தாண்டு இரண்டு வாரத்தில், 'ரிசல்ட்' வெளியிடப்பட்டு உள்ளது.
பொது பிரிவினருக்கு 50 விகிதம்; பொது பிரிவு மாற்றுத்திறனாளிகளுக்கு 45; பட்டியலினம் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு 40 விகிதமாக தகுதி மதிப்பெண்கள் நிர்ணயிக்கப்பட்டு உள்ளன.
கடந்தாண்டுகளில், அந்தந்த பிரிவினருக்கான தகுதி மதிப்பெண்கள் அடிப்படையில், தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டிருந்தன. இந்தாண்டு விகிதாச்சார முறையில் தகுதி நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
ஓரிரு நாட்களில் மாநில மற்றும் அகில இந்திய இடங்களுக்கான மாணவர் சேர்க்கை நடக்கும் என, மத்திய சுகாதார சேவைகளுக்கான தலைமை இயக்குனரகம் தெரிவித்து உள்ளது.

