ADDED : மே 14, 2024 03:56 AM
அலங்காநல்லுார்: ''அ.தி.மு.க.,வில் தாய்ப்பாலை குடித்துவிட்டு தி.மு.க.,விற்கு சென்றவுடன் அமைச்சர் ரகுபதி விஷத்தை கக்குவது பாவ செயலாகும்,'' என, முன்னாள் அமைச்சர் உதயகுமார் தெரிவித்தார்.
மதுரையில் அவர் கூறியதாவது:
இன்று, இரண்டு கோடி தொண்டர்களுடன் வலிமையுள்ள இயக்கமாக அ.தி.மு.க.,வை பொதுச்செயலர் பழனிசாமி வழி நடத்தி வருகிறார். இதை பொறுக்க முடியாமல் வாய்க்கொழுப்புடன் சிலர் புரளி பேசி வருகின்றனர்.
தொண்டர்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தும் விதமாக அமைச்சர் ரகுபதி பேசியுள்ளார். அ.தி.மு.க.,வில் இருந்த போது தாய்ப்பாலை குடித்துவிட்டு தி.மு.க.,விற்கு சென்று எதிராக விஷத்தை கக்குகிறார். இது மிகப்பெரும் பாவ செயலாகும். அ.தி.மு.க.,வில் எந்த இடைவெளியும், பிளவும் இல்லை.
மதுரையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் வீட்டிலேயே திருடர்கள் கைவரிசை காட்டியுள்ளனர். சாமானிய மக்களுக்கு எங்கே பாதுகாப்பு இருக்கிறது. திருடர்கள், பயங்கரவாதிகள், கஞ்சா வியாபாரிகள், சமூக விரோதிகளுக்கு போலீஸ் மீது பயம் விலகிவிட்டது. போலீசாரை சுதந்திரமாக செயல்பட அனுமதித்தால் குற்றங்கள் நிகழாமல் தடுக்க முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.

