ADDED : ஏப் 04, 2024 10:18 PM
சென்னை:'இண்டியா' கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து, கோவையில் 12ம் தேதி, முதல்வர் ஸ்டாலினும், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுலும் ஒரே மேடையில் பிரசாரம் செய்கின்றனர்.
கோவை தொகுதியில், தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை வெற்றி பெறக்கூடாது என்பதற்காக, தேர்தல் பணிகளை தி.மு.க.,வினர் தீவிரமாக செய்து வருகின்றனர். அதன்படி, ராகுலின் முதல் கட்ட பிரசாரத்தை, கோவை தொகுதியில் நடத்த முடிவு செய்துள்ளனர்.
ஏற்கனவே கோவையில் பொது மக்களையும், தொண்டர்களையும் கவரும் வகையில், பிரதமர் மோடி, 'ரோடு ேஷா' நடத்தினார்.
அதற்கு இணையாக, கோவையில் ராகுலின் பொதுக்கூட்டத்தை நடத்த, தமிழக காங்கிரசார் திட்டமிட்டுள்ளனர். அந்த கூட்டத்தில், கோவை, நீலகிரி, நாமக்கல், ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட கொங்கு மண்டல வேட்பாளர்களை ஆதரித்து, ராகுல் பிரசாரம் செய்கிறார்.
கோவையில் மட்டும் ராகுலுடன் முதல்வர் ஸ்டாலினும் கூட்டாக பிரசாரம் செய்கிறார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை, தி.மு.க., தலைமை நேற்று வெளியிட்டது.
அதன் விபரம்:
முதல்வர் ஸ்டாலின், ராகுல் இணைந்து, 12ம் தேதி 'இண்டியா' கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து, கோவை செட்டிபாளையம் எல் அண்ட் டி., பைபாஸ் சாலையில் நடக்கும் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்கின்றனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

