ADDED : மே 04, 2024 05:45 AM

சென்னை : அக்னி நட்சத்திரம் என்ற கத்திரி வெயில் காலம் இன்று துவங்குகிறது.
சென்னை வானிலை மைய இயக்குனர் செந்தாமரை கண்ணன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழகம், புதுச்சேரியில் இன்று முதல் மூன்று நாட்களுக்கு, ஓரிரு இடங்களில் மணிக்கு, 40 கி.மீ., வேகம் வரை பலத்த காற்று வீசுவதுடன், இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யலாம். நீலகிரி, கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஈரோடு, திருப்பத்துார் மற்றும் வேலுார் மாவட்டங்களில், வரும் 7ம் தேதி ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
தமிழகத்தில் சில மாவட்டங்களில், 44 டிகிரி செல்ஷியஸ் வரையிலும், சில மாவட்டங்களில், 40 டிகிரி செல்ஷியஸ் வரையிலும் வெயில் பதிவாகும். கடலோரம் அல்லாத வட மாவட்டங்களில், சில இடங்களில் வெப்ப அலை வீசும்' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் அளித்த பேட்டி:
சென்னை போன்ற கடலோர மாவட்டங்களில், மற்ற மாவட்டங்களைவிட வெப்பநிலை குறைவாக பதிவாகிறது. ஆனால், வளி மண்டலத்தில் வெப்பத்துடன் கூடிய ஈரப்பதம் இருப்பதால், உஷ்ணமாக, புழுக்கமாக காணப்பட்டு, அசவுகரியமாக இருக்கும்.
கடலோரத்தில் கடற்காற்றும் தரைக்காற்றும் இணைந்து, வெப்ப அளவை தீர்மானிக்கின்றன. கடலோரம் அல்லாத மாவட்டங்களில், நிலப்பகுதியில் மண்ணின் வெப்பம், அந்த பகுதியின் வெப்பமாக தீர்மானிக்கப்படும்.
அதேபோல, மலைப் பகுதிகளில், முற்பகலில் பாறைகள், மலைகள் வெப்பத்தை உள்வாங்கி, மாலை நேரங்களில் அது நிலப்பகுதியில் பரவுவதால், இரவு வரையிலும் வெப்பமான சூழல் நிலவுகிறது.
கோடை வெயிலின் போது, வெவ்வேறு திசைகளில் காற்று வீசி, அது சந்திக்கும் இடங்களில், மேகக்கூட்டங்கள் உருவாக வாய்ப்பிருந்தால், அந்த பகுதிகளில் ஆலங்கட்டி மழை பெய்ய வாய்ப்புள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
20 இடங்களில் வெயில் சதம்
நேற்று மாலை நிலவரப்படி, தமிழகம், புதுச்சேரியில் அதிகபட்சமாக, ஈரோட்டில், 43 டிகிரி செல்ஷியஸ், அதாவது, 109 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானது. மொத்தம் 20 இடங்களில், 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வெப்பம் பதிவானது.
சென்னை நுங்கம்பாக்கம், காரைக்கால், புதுச்சேரி, 38; கடலுார், கோவை, நாகை, தஞ்சாவூர், 39; மீனம்பாக்கம், நாமக்கல், பாளையங்கோட்டை, தர்மபுரி, மதுரை விமான நிலையம், சேலம், 40; திருச்சி, மதுரை, 41; கரூர் பரமத்தி, திருப்பத்துார், திருத்தணி, வேலுார், 42 டிகிரி செல்ஷியஸ் வெப்பம் பதிவானது.
ஊட்டி, 24; கொடைக்கானல், 25; குன்னுார், 28; வால்பாறை, 30; பாம்பன், பரங்கிப்பேட்டை, கன்னியாகுமரி, தொண்டி, துாத்துக்குடி, 36 டிகிரி செல்ஷியஸ் வெப்பம் பதிவானது.