ADDED : செப் 11, 2024 11:33 PM
சென்னை:தமிழகத்தில் கன மழைக்கான வாய்ப்பு இல்லாத நிலையில், காற்றில் வெப்பநிலை மற்றும் ஈரப்பதம் அதிகரிப்பதால், மக்களுக்கு அசவுகரியம் ஏற்பட வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அந்த மையம் வெளியிட்ட அறிக்கை:
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஒடிசா அருகில் கரையை கடந்தாலும், அது மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் கன மழையை கொடுத்து வருகிறது. இது மேலும் சில நாட்கள் நீடிக்கும்.
தமிழகத்தில் மேற்கு திசையில் இருந்து வீசும் காற்றின் வேகம் மாறுபடுகிறது. இதனால், தமிழகத்தில் ஒருசில இடங்கள், புதுச்சேரியில் இடி, மின்னலுடன் இன்று மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
கன மழைக்கான வாய்ப்புகள் இல்லாததால், பகல் நேர வெப்பநிலை உயர்ந்து வருகிறது.
தமிழகத்தில் நேற்று மாலை நிலவரப்படி, மதுரை நகரம் மற்றும் விமான நிலையம், நாகப்பட்டினம், திருச்சி, துாத்துக்குடி ஆகிய நகரங்களில் வெப்பநிலை, 100 டிகிரி பாரன்ஹீட் அதாவது, 38 டிகிரி செல்ஷியசை கடந்து பதிவானது.
இன்று ஒருசில இடங்களில் காற்றில் ஈரப்பதம் அதிகரிப்பதால், வெப்பநிலையும் அதிகரிக்கும். இதனால் மக்களுக்கு அசவுகரியம் ஏற்படும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், இரண்டு நாட்களுக்கு வானம் மேகமூட்டமாக காணப்படும். ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. நகரின் பகல் நேர அதிகபட்ச வெப்பநிலை, 37 டிகிரி செல்ஷியசாக இருக்கும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.